தேர்தல் நேரத்தில்தான் ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஞாபகத்துக்கு வரும்: இபிஎஸ்

6

சென்னை: தேர்தல் நேரத்தில்தான் ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஞாபகத்துக்கு வரும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறினார்.


இபிஎஸ், 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இன்று பல்லாவரம் மற்றும் தாம்பரம் சட்டமன்றத் தொகுதி தொண்டர்கள் முன்னிலையில் குரோம்பேட்டை, 200 அடி ரேடியல் சாலையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: தமிழகத்தில் நம்மை எதிர்க்கும் சக்தி திமுகவுக்கு இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது. தேர்தல் நேரத்தில் மட்டும் தான் வீர வசனம் பேசுவார்கள்.
நீட்டுக்கு விலக்கு பெற முடியவில்லை, சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தேவை என்கிறார், தேவைதான். திமுக மத்தியில் 15 ஆண்டுகள் இருந்தது, அப்போது ஏன் மாநில சுயாட்சி பற்றி பேசவில்லை? தேர்தல் வந்தால் மாநில சுயாட்சி என்பார்கள், தேர்தல் முடிந்தால் விட்டுவிடுவார்கள். மாநில சுயாட்சி கிடைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தால் மத்தியில் அதிகாரத்தில் இருக்கும்போதே பெற்றிருக்கலாம். தேர்தல் பிரசாரம் செய்வதற்கு மாநில சுயாட்சி பற்றி பேசுகிறார், இனி இது எடுபடாது.


அமைச்சர் நேரு துறையில் ஊழல், முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை 3 முறை கடிதம் அனுப்பியது ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை, சட்டப்படி எஃப்.ஐ.ஆர் போட்டே தீர வேண்டும். போடும்போது என்ன நடக்குமென்பது எல்லோருக்கும் தெரியும்.
அவர் இபிஎஸ் துரோகி என்கிறார், நான் துரோகி அல்ல. நாட்டு மக்களை ஏமாற்றும் ஸ்டாலின் தான் தமிழின துரோகி. சட்டம் ஒழுங்கு சீர்கேடு. போதை பொருள் எல்லா இடத்திலும் கிடைக்கிறது. போதை ஆசாமிகள் குற்றச்செயலில் ஈடுபடுகின்றனர், கொலை, கொள்ளை பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. இதற்கு காரணமே ஸ்டாலின்தான். போதையை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி இருக்கலாம். ஒரே ஆண்டில் போதை பொருள் விற்பனை என்று சொன்னேன். அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. இன்றைய தினம் போதை பொருள் நிறைந்த மாநிலமாகிவிட்டது.


இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா?




விலைவாசி உயர்வு எண்ணிப் பாருங்கள்.விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. ஏழை நடுத்தர மக்கள் பாதிப்பு பற்றி சிந்திக்க நேரமில்லை, போட்டோ ஷூட்டில் 5 ஆண்டுகள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின் தான்.
திட்டத்துக்கு எத்தனை பேர் வச்சிருக்கார், எதாவது ஞாபகம் இருக்கா..? திட்டம் அறிவித்து குழு போடுவார், அதோடு முடங்கிவிட்டது, 52 குழு போட்டார்கள். என்ன அறிக்கை கொடுத்தது..? வெள்ளை அறிக்கை கேட்டால் பதில் இல்லை. வேலைவாய்ப்பு அதிகம் கிடைத்தது என்று சொல்கிறார். அதில் உண்மையில்லை.

உங்கள் ஆட்சியில் என்ன கிடைத்தது?



திமுக ஆட்சியில் தொழில் முதலீடு 1179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 12 லட்சத்து 32 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது, என்று தொழில்துறை அமைச்சர் பச்சை பொய் சொல்கிறார், இதனால் 36 லட்சம் பேருக்கு வேலை கிடைத்ததாம், 77% ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்கிறார். அத்தனையும் ஏட்டளவில் உள்ளது, நடைமுறைக்கு வரவில்லை.

இதற்கு என்ன அவசியம்..?



லேப்டாப் எல்லாம் கல்லூரி ஆரம்பிக்கும் முன்பு கொடுத்திருக்க வேண்டும். படித்து வெளியில் செல்லும்போது கொடுப்பதால் என்ன பயன்? எல்லாம் தேர்தல் தோல்வி அச்சத்தில் கொடுக்கிறார்.


இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Advertisement