அனில் அம்பானி மீது சி.பி.ஐ., புதிய வழக்கு
புதுடில்லி: தொழிலதிபர் அனில் அம்பானி, 66, மற்றும் அவரது, 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்' நிறுவனத்துக்கு எதிராக, 2,220 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி தொடர்பாக, சி.பி.ஐ., புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி. இவர் மீதும் இவரது நிறுவனத்தின் மீதும் வங்கிக் கடன் மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., சார்பில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள அனில் அம்பானியின் 3,716.83 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.
இந்நிலையில், 2013 - 17ம் ஆண்டுகளுக்கு இடையே, மும்பை 'பாங்க் ஆப் பரோடா' கிளையில் அனில் அம்பானியின் 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்' கடன் வாங்கியதாகவும், அது தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இதனால், வங்கிக்கு 2,220 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக அனில் அம்பானி மீதும், 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்' நிறுவனத்துக்கு எதிராகவும் சி.பி.ஐ., புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில், ஏராளமான டிஜிட்டல் ஆவணங்களை அவர்கள் அள்ளிச் சென்றதாக தகவல் வெளியாகிஉள்ளது.