இதே நாளில் அன்று


@quote@ பிப்ரவரி 27:quote



வேலுாரில் சங்கீத சபா நடத்திய, 'கொன்னக்கோல்' கோபாலாச் சாரியாரின் மகனாக, 1929, ஆகஸ்ட் 4ல் பிறந்தவர் ராமபத்ரன்.
இவர், தன் 8வது வயதில், தந்தையிடம் மிருதங்கம் இசைக்க கற்றார். சேலத்தில், திருப்பாற்கடல் ஸ்ரீநிவாச அய்யங்காரிடம் சங்கீதம் கற்றார். 1943ல், சென்னை ஜெகநாத சங்கீத சபாவில் நடந்த மதுரை மணி அய்யரின் கச்சேரிக்கு, தன் 13வது வயதில் மிருதங்கம் வாசித்தார்.

தொடர்ந்து, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், செம்மங்குடி சீனிவாச அய்யர், ஜி.என்.பாலசுப்பிரமணியம், லால்குடி ஜெயராமன் உள்ளிட்ட கர்நாடக இசை ஜாம்பவான்களுக்கும், ஜாகிர் உசேன் போன்ற ஹிந்துஸ்தானி கலைஞர்களுக்கும் மிருதங்கம் வாசித்தார்.

'மிருதங்கம், சங்கீதத்துக்கு துணையாக இருக்க வேண்டுமே தவிர, பாடகரை மிஞ்சி ஒலிக்கக் கூடாது' என்பதில் உறுதியாக இருந்தார். 'சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத சூடாமணி, கலைமாமணி' உள்ளிட்ட விருதுகளை பெற்றவர், தன், 82வது வயதில், 2012ல் இதே நாளில் மறைந்தார்.

சிந்து பைரவி திரைப்படத்தில் இடம்பெற்ற, 'மரி மரி நின்னே' என்ற தியாகராஜரின் கீர்த்தனைக்கு மிருதங்கம் வாசித்தவர், மறைந்த தினம் இன்று!

Advertisement