மார்க்சிஸ்ட் - - காங்., தொண்டர்கள் மோதல் கேரளாவில் பதற்றம்

திருவனந்தபுரம்: கேரளாவில் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தாக்கப்பட்டதை அடுத்து, ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் -- - காங்., தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

கேரள அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை வழங்கப்படுவதில்லை என சர்ச்சை எழுந்தது. இதனால் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு எதிராக இளைஞர் காங்., அமைப்பினர் போராட்டத்தில் இறங்கினர்.

நேற்று முன்தினம் கண்ணுார் ரயில்வே ஸ்டேஷன் சென்ற அமைச்சருடன் காங்., தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் அமைச்சருக்கு கழுத்து, கையில் காயம் ஏற்பட்டது. கண்ணுார் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சரை காங். தொண்டர்கள் தாக்கியதாக குற்றஞ்சாட்டி மார்க்சிஸ்ட் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்; காங்., கொடிக்கம்பம், பேனர்களை சேதப்படுத்தினர். கோடியேரி காங்., அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டது.

வீணா ஜார்ஜை தாக்கியதாக காங்., மாணவர் அமைப்பினர் ஐந்து பேரும், கருப்புக்கொடி காட்டியதாக இளைஞர் அமைப்பினர் 10 பேரும் கைது செய்யப்பட்டனர். இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால், கேரளாவில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

Advertisement