பிரிட்டன் அரசுக்கு ரூ.35,000 கடன் தந்த இந்தியர் 109 ஆண்டுகளுக்கு பின் திருப்பி கேட்கும் வாரிசுகள்
போபால்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பிரிட்டன் அரசுக்கு, 109 ஆண்டுகளுக்கு முன் 35,000 ரூபாய் கடன் தந்த நிலையில், தற்போது, 12 கோடி ரூபாயாக அதை திருப்பிக் கேட்க அவரின் குடும்பத்தினர் முடிவு செய்து உள்ளனர்.
இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதி களை, 100 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டிஷார் ஆட்சி செய்தனர். கடந்த 1947ல், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின், பிரிட்டிஷார் வெளியேறினர்.
உரிய ஆவணங்கள்
இந்நிலையில், பிரிட்டிஷார் இந்தியாவில் ஆட்சி செ ய்த போது, 1917ல், மத்திய பிரதேசத்தின் சீஹோர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சேத் ஜூம்மாலால் ருதியா என்பவரிடம் 35,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.
பிரிட்டன் அரசுக்கு கடன் கொடுத்த விவகாரம் ருதியாவின் மகன் உள்ளிட்டோருக்கு தெரிந்திருந்தும், அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்த விஷயத்தில் அவர்கள் அக்கறை காட்டவில்லை.
இதனால், 109 ஆண்டுகளாக இந்த விஷயம் கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.
இந்நிலையில், ஜும்மாலால் ருதியாவின் பேரன் விவேக், தன் தந்தை தொடர்பான உயில்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்துள்ளார்.
அப்போது, தன் தாத்தா, பிரிட்டன் அரசுக்கு 35,000 ரூபாய் கடன் தந்தது தொடர்பான அசல் பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் கிடைத்துள்ளன.
முதல் உலகப்போரால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் போது, சீஹோர் சமஸ்தான தேவைக்காக இந்த கடன் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது 'போர்க்கடன்' என்றும் அழைக்கப்படுகிறது.
பிரிட்டன் அரசு, கடந்த 1917 ஜூன் 4ல் 35,000 ரூபாயை கடனாக பெற்றது இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன், 35,000 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை.
தற்போது, வட்டியுடன் சேர்த்தால், இதன் மதிப்பு 12 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த பணத்தை பிரிட்டன் அரசு இதுவரை திரும்ப தராததால், கடனை திருப்பிக் கேட்க விவேக் மற்றும் அவரின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இறையாண்மை
இது தொடர்பாக, பிரிட்டன் அரசுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இறையாண்மை கொண்ட ஒரு நாடு, தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியது சர்வதேச சட்டப்படி கட்டாயம் என்பதால், விவேக் குடும்பத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப் படுகிறது.