கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை வெளிப்படையாக அறிவித்தது கனடா அரசு
டொரான்டோ: 'கனடாவில் நடந்த வன்முறை சம்பவங்களில் இந்தியாவிற்கு எவ்வித தொடர்பும் இல்லை' என, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி காலத்தில், இந்தியா -கனடா இடையே இருந்த உறவு மிக மோசமான நிலையை எட்டியது.
இந்திய அரசால் கடந்த 2020ல் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவரும், காலிஸ்தான் ஆதரவாளருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2023ல் கனடாவில் கொல்லப்பட்டார். இதில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக ட்ரூடோ குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் விழுந்தது. இந்நிலையில், கனடாவில் நடந்த வன்முறை செயல்களுக்கும் இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்நாட்டின் தற்போதைய அரசு தெரிவித்துள்ளது.
மார்க் கார்னி தலைமையிலான கனடாவின் புதிய அரசு, கசப்பான அந்த சம்பவங்களை விடுத்து, இந்தியாவுடன் மீண்டும் இணக்கமான உறவை ஏற்படுத்த முயல்வதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கனடா மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு இடையே வலுவான துாதரக பேச்சு நடந்திருப்பதாகவும், பழைய கசப்பான சம்பவங்கள் இனி தொடராது என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் கனடா தெரிவித்துள்ளது.
குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்க, இரு தரப்பிலும் தலா ஒரு தொடர்பு அதிகாரியை நியமிக்க இருநாடுகளும் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளன.
இன்று இந்தியா வருகிறார் கார்னி!
கனடாவின் பிரதமராக மார்க் கார்னி பொறுப்பேற்றுக்கொண்ட பின், நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு முதன்முறையாக இன்று வருகிறார். மஹாராஷ்டிராவின் மும்பைக்கு இன்று வரும் கார்னி, இங்கு இரண்டு நாட்கள் தங்குகிறார். அப்போது, இந்தியா மற்றும் கனடாவின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், நிதி வல்லுநர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.
இதைத்தொடர்ந்து, மார்ச் 1ம் தேதி டில்லி செல்லும் அவர், 2ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து விரிவான பேச்சு நடத்த உள்ளார். இப்பேச்சின்போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு தரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுக்களை மீண்டும் துவங்குவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும், இந்தியாவின் அணுசக்தி துறைக்காக, கனடாவில் இருந்து யுரேனியம் வினியோகம் செய்வது தொடர்பான ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.