சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்

3

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் முடிவு எடுத்துள்ளது.


சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா பதவி வகிக்கிறார். இவர், மார்ச் 5ம் தேதி ஓய்வு பெற இருக்கிறார்.
இவருக்கு பிறகு, யாரை தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என்று முடிவெடுக்க, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் கூட்டம் நடந்தது.
இதில், கேரளா உயர்நீதிமன்ற நீதிபதியான சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கொலீஜியம் கூட்டத்தில், இன்னும் ஒரு முக்கிய முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் நீதிபதியானவர், குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே அந்த நீதிமன்றத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்படலாம்.

இரண்டு மாத காலத்துக்கு முன்னதாக அவரை பணியிட மாறுதல் செய்யலாம். அதன் மூலம், தான் பதவியேற்பதற்கு முன்னதாகவே, அந்த நீதிமன்ற செயல்பாடுகள் பற்றி குறிப்பிட்ட நீதிபதி நன்கு அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கொள்கை முடிவின்படி, ஆந்திரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி லிசா கில், முன்னதாகவே ஆந்திரா நீதிமன்றத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.


யார் இந்த தர்மாதிகாரி


தர்மாதிகாரி, மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றியவர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சொந்த ஊராக கொண்டவர். மத்திய பிரதேசத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியவர். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் கேரளா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

Advertisement