தொடங்கியது போர்: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதல்

24

டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர், வான்வழித் தாக்குதலை முழு வீச்சில் தொடங்கியுள்ளனர். தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்கள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


விலைவாசி உயர்வுக்கு தீர்வு கோரியும், ஈரானிய மதகுரு கமேனி ஆட்சியை எதிர்த்தும், அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். அந்நாட்டு அரசு, போராட்டக்காரர்கள் மீது, ராணுவத்தினரை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான பேர் கொல்லப்பட்டனர்.

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை கைவிட வேண்டும், இல்லையெனில், அமெரிக்கப்படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வந்தார். மேலும், 'எந்தக்காலத்திலும் நாங்கள் அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம்' என்று ஈரான் உத்தரவாதம் அளித்து ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தினார்.

Tamil News
Tamil News
Tamil News
இது தொடர்பாக, ஈரான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையே ஓமன் நாட்டின் முயற்சியால் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. இதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று அதிபர் டிரம்ப் இன்று தெரிவித்திருந்தார். மிகப்பெரிய முடிவுக்கு தயாராகி வருவதாகவும் கூறியிருந்தார்.


இந்நிலையில் இன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் , ஈரான் மீது தாக்குதலை தொடங்கினர். தலைநகர் டெஹ்ரான் மற்றும் ஜோம்ஹாரி பகுதிகளில் அடுத்தடுத்து பல ஏவுகணைகள், குண்டுகள் வந்து விழுந்தன. உயர்ந்த கட்டடங்கள் பல தீப்பற்றி எரிவதாக, சர்வதேச செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் ஏவுகணை தாக்குதல் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.



மேலும் பல இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதால் ஈரான் முழுவதும் அபாய ஒலி எழுப்பப்பட்டு வருகிறது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அனைவரும் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.



இஸ்ரேல் உறுதி


ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் காட்ஸ் உறுதி செய்தார். அமெரிக்க ராணுவமும், தாக்குதல் நடத்தியதை உறுதி செய்துள்ளது. ஈரான் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால், இஸ்ரேல் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


கடந்த 2025 ஜூன் மாதம், அமெரிக்க விமானப்படை விமானங்கள், ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது குண்டு வீசி தாக்கியது குறிப்பிடத்தக்கது.

தயார் நிலையில் அமெரிக்க படைகள்



ஈரான் மீது தாக்குதலுக்கு முன்னோட்டமாக, அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பலான ஜெரால்டு போர்டு, வளைகுடா பிராந்தியத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைன், அமீரகம், இஸ்ரேல், சவுதி அரேபியா, ஜோர்டான், கிரீஸ் நாடுகளில், அமெரிக்க போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


ஓமன் வளைகுடா, அரேபிய வளைகுடா, ஹோர்முஸ் நீரிணை, அரபிக் கடல் பிராந்தியங்களில் ஏராளமான அமெரிக்க போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் பட்சத்திலும், அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று ஒப்பந்தம் செய்ய மறுக்கும் பட்சத்திலும், இந்த படைகளை அமெரிக்கா முழு வீச்சில் களம் இறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதிபர் மாளிகை மீது தாக்குதல்


ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானில் அதிபர் மாளிகை, மதகுரு கமேனியின் மாளிகை மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கமேனி ரகசிய இடத்தில் வசிப்பதால் அவருக்கு பாதிப்பு எதுவுமில்லை. அதிபர் மாளிகையில் நடத்தப்பட்ட தாக்குதலில், அதிபருக்கு எதுவும் பாதிப்பில்லை என்று ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement