16 கண் மதகு சீரமைப்பு பணி மழைக்கு முன் முடிக்க திட்டம்

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம், 87.79 அடியாக இருந்த நிலையில், நேற்று, 87.61 அடியாக சரிந்தது. வினாடிக்கு, 373 கனஅடி நீர் வந்த நிலையில், காவிரி கரையோர மாவட்ட குடிநீர் தேவைக்கு, 2,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.



மேட்டூர் அணை, 1934ல் கட்டி முடிக்கப்பட்டது. அதற்கு முன், 1931 ஜூன், 20ல் அணை உபரிநீர் வெளியேற்றும், 16 கண் மதகு கட்டி முடிக்கப்பட்டது. அது கட்டி, 94 ஆண்டுகள் ஆன நிலையில் நீர்வளத்துறை சார்பில், 19 கோடி ரூபாய் செலவில், கடந்த ஆண்டில் இருந்து, மதகுகளை சீரமைக்கும் பணி நடக்கிறது. அப்பணியை நேற்று காலை சென்னை ஐ.ஐ.டி., கட்டமைப்பு ஆய்வக பேராசிரியர் அழகு சுந்தர மூர்த்தி ஆய்வு செய்தார்.


அப்போது, 9 மதகுகளில் சீரமைப்பு பணி முடிந்த நிலையில், மேலும், 7 மதகுகளில் சீரமைப்பு பணி தொடங்கி
யுள்ளது. இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் பேசிய பின், அழகு சுந்தரமூர்த்தி கூறியதாவது:
மேட்டூர் அணை, 16 கண் மதகு சீரமைப்பு பணி எதிர்பார்த்தபடி நடக்கிறது. பணிகளை முடிக்க, வரும் செப்டம்பர் வரை அவகாசம் உள்ளது. எனினும் தென்மேற்கு பருவமழை வரும் மே அல்லது ஜூனில் தொடங்கினால், மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்து மதகு பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது. அதனால் தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன், பணியை முடிக்க பொறியாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்ந்து அவர், அணை, 8 கண் மதகு, 5 கண் மதகு பகுதிகளை பார்வையிட்டு சீரமைப்பு பணி மேற்கொள்வது குறித்து, பொறியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேட்டூர் அணை மேற்பார்வை பொறியாளர் வெங்கடாசலம், செயற்பொறியாளர் செல்வராஜ், நீர்
வளத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement