'நம்பர்-1' வீரரை வென்ற லக்சயா * ஆல் இங்கிலாந்து பாட்மின்டனில்...

பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் வெற்றி பெற்றார்.
பர்மிங்காமில், ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் கடந்த ஆண்டு காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லக்சயா சென் ('நம்பர்-12'), உலகின் 'நம்பர்-1' வீரர், நடப்பு சாம்பியன் சீனாவின் ஷி யூ கியை சந்தித்தார்.
முதல் செட்டை லக்சயா 23-21 என போராடி வென்றார். அடுத்த சுற்றில் துவக்கத்தில் இருந்து பின்தங்கிய லக்சயா 19-21 என இழந்தார். வெற்றியாளரை முடிவு செய்யும் 3வது, கடைசி செட்டில் ஆதிக்கம் செலுத்திய லக்சயா 21-17 என கைப்பற்றினார். முடிவில் லக்சயா 23-21, 19-21, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மாளவிகா ஏமாற்றம்
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா ('நம்பர்-52'), உலகின் 'நம்பர்-3' வீராங்கனை, சீனாவின் யு பெய் செனை எதிர்கொண்டார். இதில் மாளவிகா 11-21, 6-21 என்ற நேர் செட்டில் எளிதாக தோல்வியடைந்தார்.
கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி, மலேசியாவின் பங் ஹூ, சு இன் செங் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 21-17, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
நாடு திரும்பினார் சிந்து
பெண்கள் ஒற்றையரில் பங்கேற்க இந்தியாவின் சிந்து, பர்மிங்காம் செல்ல இருந்தார். இதற்காக துபாய் சென்ற நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக, விமான நிலையம் மூடப்பட்டது. அங்குள்ள ஓட்டலில் தங்கி இருந்த சிந்து, வேறு வழியில்லாத நிலையில், நேற்று நாடு திரும்பினார்.
அவர் கூறுகையில்,''கடந்த சில நாட்கள் நிச்சயமற்ற சூழல் நிலவியது. தற்போது பாதுகாப்பாக வீடு திரும்பியது மகிழ்ச்சி. கடினமான நேரத்தில் எங்களை பாதுகாத்த அனைவருக்கும் நன்றி,'' என்றார்.

Advertisement