வளைவுகளில் தடுப்புச்சுவர் இல்லை வாகன ஓட்டுனர்கள் பரிதவிப்பு

வால்பாறை: அபாயகரமான வளைவுகளில் தடுப்புச்சுவர் இல்லாததால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வால்பாறை நகரில் இருந்து நல்லகாத்து ரோடு வழியாக முடீஸ், சோலையாறுடேம், சாலக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு, நாள் தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இது தவிர, நல்லமுடி காட்சி முனை பகுதிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களும் இந்த ரோட்டில் தான் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், வால்பாறை நகரிலிருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள நல்லகாத்து ரோட்டில் இடது புறம் தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டுனர்கள் கூறியதாவது:

வால்பாறை மலைப்பாதையில், வன விலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால், வாகனங்களை மிக கவனமாக இயக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், வால்பாறை நகரில் இருந்து நல்லகாத்து வழியாக செல்லும் ரோட்டில் இடது புறம் மிகவும் அபாயகரமான வளைவு உள்ளது.

இங்கு தடுப்புச்சுவர் கட்ட நகராட்சி அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பருவ மழைக்கு முன்னதாக, இந்த ரோட்டில் தடுப்புச்சுவர் கட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement