ஆசிய கால்பந்து: அசத்துமா இந்தியா * இன்று வியட்நாம் அணியுடன் மோதல்
பெர்த்: பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து முதல் போட்டியில் இந்திய அணி, இன்று வியட்நாமை எதிர்கொள்கிறது. இதில் சிறப்பாக செயல்பட்டால், உலக கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன், நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மூன்று பிரிவுகளாக பங்கேற்கின்றன. மூன்று பிரிவில் முதல் இரு இடம் பெறும் 6, ஒவ்வொரு பிரிவில் 3வது இடம் பெற்ற சிறந்த 2 என மொத்தம் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இதில் 6 அணிகள் உலக கோப்பை தொடருக்கு (2027, பிரேசில்) தகுதி பெறலாம்.
உலகத் தரவரிசையில் 67 வது இடத்திலுள்ள இந்திய பெண்கள் அணி, 'சி' பிரிவில், 2011ல் உலக கோப்பை வென்ற, 2014, 2018ல் ஆசிய சாம்பியன் ஆன உலகின் 'நம்பர்-8' ஜப்பான், வியட்நாம் (36), சீன தைபே (40) என வலுவான அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
முதல் மோதல்
இன்று தனது முதல் போட்டியில் இந்திய அணி, கடந்த முறை காலிறுதிக்கு முன்னேறிய வியட்நாமை சந்திக்கிறது. இந்திய அணியை பொறுத்தவரையில் இத்தொடருக்கு சரியான முறையில் தயாராகவில்லை. கடைசியாக 2025, அக். மாதத்திற்குப் பின், சர்வதேச போட்டியில் இந்தியா பங்கேற்கவில்லை. இருப்பினும் துருக்கி சென்று கிளப் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்று, பிறகு பெர்த் சென்றது.
பயிற்சியாளராக கோஸ்டாரிகாவின் அமேலியா, கடந்த ஜனவரி மாதம் தான் பொறுப்பேற்றுள்ளார். இருப்பினும் கேப்டன் ஸ்வீட்டி தேவி, சஞ்சு, அஞ்சு, பியாரி, மணிஷா, தமிழகத்தில் கோல் கீப்பர் சவுமியா வெற்றிக்கு போராடலாம். 91 போட்டியில் 23 கோல் அடித்த, அனுபவ வீராங்கனை கிரேஸ், அணியின் இளம் வீராங்கனை ஷில்கி தேவி 20, இந்தியாவுக்கு பலம் சேர்க்க உள்ளனர்.
வியட்நாம் எப்படி
ஆசிய கோப்பை அரங்கில் 2003க்குப் பின் இந்தியா, வியட்நாம் அணிகள் மோதுகின்றன. முன்னதாக மோதிய இரண்டு போட்டியிலும் வியட்நாம் 3-0, 2-1 என வென்றுள்ளது. இருப்பினும் இன்று இந்தியா வென்றால், உலக கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.
கிடைக்குமா 'உலக' வாய்ப்பு
ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதிக்கு செல்லும் 4, 'பிளே ஆப்' சுற்றில் அசத்தும் 2 என மொத்தம் 6 அணிகள், உலக கோப்பை தொடருக்கு (2027, பிரேசில்) தகுதி பெறும். 7, 8வது இடம் பெறும் அணிகள், 'உலக' தொடருக்கான 'பிளே ஆப்' தகுதிச்சுற்றில் (பிரேசில்) பங்கேற்கலாம்.
இப்படி பண்றீங்களேம்மா...
இந்திய அணி வீராங்கனைகள் 26 பேர், பயிற்சியாளர்களுக்கு தவறான சீருடைகள் அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. சிறிய 'ஜெர்சி' காரணமாக போட்டியில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கேப்டன் ஸ்வீட்டி உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் 8 பேர் இணைந்து, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு எழுதிய கடிதத்தில், 'எங்களுக்கு அனுப்பிய சீருடைகள் 15 வயதுக்கு உட்பட்ட வீராங்கனைகள் அணிவது போன்றும், அதை விடவும் சிறியதாக உள்ளது. 80 சதவீத அணியினருக்கு இது பொருத்தமாக இல்லை. பயிற்சியாளர்களுக்கும் இப்படித் தான் உள்ளது. போட்டி துவங்கும் முன், உடனடியாக இதை மாற்றித் தரவும்,' என தெரிவித்துள்ளனர்.