தென்பெண்ணை தீர்ப்பாயம் அமைவது எப்போது? மத்திய அரசுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி

சென்னை: 'உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தென்பெண்ணை தீர்ப்பாயம் அமைக்கப்படவில்லை' என, மத்திய அரசுக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: கர்நாடக மாநிலம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் ஆகிய மாவட்டங்களின் வழியே 391 கி.மீ., தூரம் பயணித்து, கடலுார் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், சுமார் 14,449 சதுர கி.மீ.,


தமிழக எல்லையை ஒட்டிய கர்நாடக வனப்பகுதியில் யார்கோள் தடுப்பணையை, கர்நாடக அரசு கட்டியுள்ளது. இந்த அணை நிரம்பினால் மட்டுமே, தமிழகத்திற்கு மார்கண்டேய நதியில் தண்ணீர் வரும். எனவே, 2009ல் யார்கோள் அணை கட்டும் பணியை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.


ஆனால், கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி, சத்தமில்லாமல் அணையின் 90 சதவீத பணிகளை, கர்நாடக அரசு முடித்து விட்டது. இதை எதிர்த்து, தமிழக அரசு தொடர்ந்த வழக்கை, கடந்த பிப்ரவரி 2ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், 'தமிழகம், கர்நாடகா இடையிலான பெண்ணையாறு நதிநீர் பங்கீடு பிரச்னைகளுக்கு தீர்வு காண, மத்திய அரசு, ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.


ஆனால், உத்தரவிட்டு ஒரு மாதம் கடந்தும் தீர்ப்பாயம் அமைக்கப்படவில்லை. இது, தமிழர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்காமல் இருப்பதையே காட்டுகிறது. இனியும் தாமதிக்காமல், மத்திய அரசு உடனடியாக தென்பெண்ணை தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement