கடைசி நேரத்தில் வீழ்ந்தது இந்தியா * ஆசிய கால்பந்தில் ஏமாற்றம்

பெர்த்: ஆசிய கால்பந்து லீக் போட்டியில் கடைசி நேரத்தில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன் நடக்கிறது. 12 அணிகள் மூன்று பிரிவுகளாக பங்கேற்கின்றன. இதில் 'டாப்-6' இடம் பெறும் அணிகள் உலக கோப்பை தொடருக்கு (2027, பிரேசில்) தகுதி பெறலாம்.
நேற்று பெர்த்தில் நடந்த 'சி' பிரிவு போட்டியில் உலகத் தரவரிசையில் 67 வது இடத்திலுள்ள இந்திய அணி, 36 வது இடத்திலுள்ள வியட்நாமை எதிர்கொண்டது. போட்டியின் 39 வது நிமிடத்தில் வியட்நாம் வீராங்கனை வான் சு, ஒரு கோல் அடித்தார். முதல் பாதியில் இந்தியா 0-1 என பின் தங்கியது.
இரண்டாவது பாதியில் இந்திய வீராங்கனைகள் போராடினர். போட்டியின் 46 வது நிமிடத்தில் சர்வதேச அரங்கில் அறிமுக வாய்ப்பு பெற்றார் இந்தியாவின் சன்பிதா. அடுத்த 6வது நிமிடத்தில் சன்பிதா (52 வது நிமிடம்) ஒரு கோல் அடிக்க, ஸ்கோர் 1-1 என சமன் ஆனது. போட்டி முடிய 3 நிமிடம் இருந்த போது, 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் வான் சு (90+4வது) மீண்டும் ஒரு கோல் அடித்து அதிர்ச்சி கொடுத்தார்.
முடிவில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் உலகின் 'நம்பர்-8', இரு முறை ஆசிய கோப்பை (2014, 2018) வென்ற ஜப்பானை (மார்ச் 7) சந்திக்க உள்ளது.
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஜப்பான் அணி 2-0 என சீன தைபேவை வென்றது.

Advertisement