ரோட்டோரம் கொட்டப்படும் கழிவு பொருட்களால் சுகாதார சீர்கேடு
வேடசந்துார்: திண்டுக்கல்- கரூர் நெடுஞ்சாலையில் வேடசந்தூர் அருகே ரங்கமலை கணவாய் பகுதியில் வாகனங்களில் கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுப்பொருட்களால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
ரெங்கமலை கணவாய் பகுதி மாவட்ட எல்லையாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இங்கு ரோட்டோர பகுதிகளில் அட்டைப் பெட்டிகளுடன் முட்டைக்கழிவுகள், ஆகாத வெங்காய மூட்டைகள், பயன்பாடற்ற கழிவுப்பொருட்கள், மருத்துவக்கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து கொட்டிச்செல்கின்றனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள் தினமலர் நாளிதழ் செய்திக்குப் பிறகு ஜே.சி.பி., இயந்திரம் வைத்து அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது. அதுபோல் தற்போதும் அரை கி.மீ., தூரத்திற்கு வெவ்வேறு கழிவுப்பொருட்களை அடுத்தடுத்து ரோட்டோரம் கொட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் குப்பைக்காடாக காட்சியளிக்கிறது. சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.
சமீபத்தில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளில் காலாவதியான மருத்துவப் பொருட்களும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இப்பகுதியில் சி.சி.டிவி., கேமரா பதிவுகள் கொண்டோ அல்லது எச்சரிக்கை பலகைகளை வைத்தோ கழிவுப்பொருட்கள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.