ஜாதிபத்திரி விலை கிடுகிடு கிலோவுக்கு 150 ரூபாய் உயர்வு பொள்ளாச்சியில் அதிகபட்ச விலை
சென்னை : பொள்ளாச்சியில் கடந்த ஜனவரியில் கொள்முதல் விலையில் கிலோ 3,050 ரூபாய்க்கு விற்பனையான ஜாதிபத்திரி, தற்போது 3,200 ரூபாய் என விலை உயர்ந்துள்ளதாக ஜாதிக்காய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி ஜாதிக்காய் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ரஞ்சித்குமார் கூறியதாவது:
பிரியாணி, புலாவ், மசாலா குருமா உள்ளிட்ட உணவுகள் தயாரிப்பில் ஜாதிபத்திரி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. கேரளாவில் விளையும் ஜாதிக்காயைவிட பொள்ளாச்சியின் ஆனைமலை பகுதியில் விளையும் ஜாதிக்காயின் சுவையும், தரமும் அதிகம். அதனால் அதற்கு வரவேற்பு உள்ளது.
கடந்த ஜன., மாதத்தில் ஒரு கிலோ ஜாதிபத்திரி பூ 3,050 ரூபாய்க்கும், ஜாதிக்காய் 460 ரூபாய்க்கும் விற்பனையானது. தற்போது அதிகபட்ச விலையாக ஒரு கிலோ ஜாதிபத்திரி பூ 3,200 ரூபாய்க்கும், ஜாதிக்காய் 480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கேரளாவில் ஜாதிபத்திரி பூ, ஒரு கிலோ 2,300 முதல் 2,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஜாதிபத்திரி அறுவடை சீசன் ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை இருக்கும். ஜாதிக்காயிலிருந்து பூ, கொட்டைகளை தனியாக பிரித்தெடுத்து இருப்பு வைத்து ஏப்ரல் வரை விற்பனை செய்வோம். ஆனால், இந்த முறை தேவை அதிகமாக இருந்ததால் ஜன., மாதத்திலேயே இருப்பு தீர்ந்துவிட்டது.
தமிழகத்தில் பொள்ளாச்சி -ஆனைமலை பகுதியில்தான் ஜாதிக்காய் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்த உற்பத்தி ஆண்டுக்கு 120 டன் ஜாதிக்காயும், 25 டன் ஜாதிபத்திரியும் உற்பத்தியாகின்றன. தற்போது சந்தைக்கு கொண்டு செல்ல விவசாயிகளிடம் இருப்பு இல்லை.
அதனால் 3,200 ரூபாய் என்பது அதிகபட்ச விலையாக இந்தாண்டு பதிவாகியுள்ளது. அடுத்து ஜூன் மாதத்தில்தான் வரத்து துவங்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் 'வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O' கருத்தரங்கு
-
ஈரானின் டிரோன் தாங்கி கப்பல் மீது தாக்குதல்; வீடியோ வெளியிட்டது அமெரிக்கா
-
“மேட் இன் பாரத்” என்றால் உலகிலேயே மிகச்சிறந்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும்
-
ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பாராட்டு!
-
ஈஷா காவேரி கூக்குரல் வழிகாட்டுதலில் தி.மலை மாவட்டத்தில் 'ஒரு கிராமம் ஓர் அரசமரம்' திட்டம்!
-
ஐடி முதல் தடய அறிவியல் வரை; பழங்குடியின மாணவர்களின் கல்விச் செலவை ஏற்று வழிநடத்தும் ஈஷா!