ஈஷா காவேரி கூக்குரல் வழிகாட்டுதலில் தி.மலை மாவட்டத்தில் 'ஒரு கிராமம் ஓர் அரசமரம்' திட்டம்!

திருவண்ணாமலை: ஈஷா காவேரி கூக்குரல் வழிகாட்டுதலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அரச மரம் நடும் 'ஒரு கிராமம் ஓர் அரசமரம்' திட்டத்தினை அரவிந்தர் கல்வி குழும செயலாளர் அரவிந்தன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள தென்பள்ளிப்பட்டு அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரியில், 'ஒரு கிராமம் ஓர் அரசமரம்' திட்டத்தின் தொடக்க விழா இன்று (23/02/2026) நடைபெற்றது.
இத்திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 800-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் அமைந்துள்ள 2500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அரச மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
பேரூராதீனம் 24-ஆவது குரு மகாசன்னிதானம் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரலின் வழிகாட்டுதலில் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் அரச மரம் நடும் 'ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டம்' மாவட்ட வாரியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தி. மலை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, அரவிந்தர் கல்வி குழும செயலாளர் அரவிந்தன் தலைமை தாங்கி, முதல் அரச மரக்கன்றை நட்டு திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அருளுரை வழங்கிய பேரூராதீனம் 25-ஆம் குருமகா சந்நிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அரச மரத்தின் முக்கியத்துவத்தையும் அதன் சிறப்புகளையும் எடுத்துரைத்தார். ஈஷா காவேரி கூக்குரல் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

அவர் பேசுகையில், “சத்குரு, 2004-ஆம் ஆண்டு பசுமை கரங்கள் இயக்கத்தினை துவங்கிய போது, ஒரு கிராமத்தில் 5 அரச மரங்கள் வைத்தால் அது அங்குள்ள மக்களின் உடல் மற்றும் மன நிலையில் பெரிய மாற்றத்தினை உருவாக்கும் எனக் கூறினார். பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, அவர்களுடன் இணைந்து இந்த “ஒரு கிராமம் அரச மரம்” திட்டத்தினை மாவட்டம் தோறும் துவங்கி செயல்படுத்தி வருகிறோம்.

இதுவரை கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, மயிலாடுதுறை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தி. மலை மாவட்டத்தில் இத்திட்டத்தினை துவங்கி உள்ளோம்.

உலகளவில் மண் வளம் குறைந்து வருவதால் உணவு பற்றாக்குறை ஏற்படும் என உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. மண் வளம் காக்க மரங்கள் மிகவும் அவசியமானது. மாணவர்கள் நீங்கள் இதனைக் கருத்தில் கொண்டு மரங்கள் நடுவதையும், நடப்பட்ட மரங்களை பராமரிக்கவும் வேண்டும்.” எனக் கூறினார்.

முன்னதாக முன்னதாக, அரவிந்தர் கல்வி குழுமச் செயலாளர் கி. அரவிந்தன் வாழ்த்துரை வழங்கிய இவ்விழாவில், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் பலராமன் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியின் நிறைவாக, அரவிந்தர் வேளாண்மைக் கல்லூரி முதல்வர் முனைவர் ஸ்ரீதர் நன்றியுரையாற்றினார். இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனத் திரளானோர் கலந்துகொண்டனர்.

Advertisement