நடிகர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை; இபிஎஸ்

5

சென்னை: தவெகவுடன் அதிமுகவோ அதன் கூட்டணி கட்சிகளோ எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கூறி உள்ளார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி;

பொறுமையாக எங்களின் கூட்டணிக்கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து, உணர்வுபூர்வமாக நாங்கள் நிறுத்துகிற அத்தனை வேட்பாளர்களும் வெற்றி பெறக்கூடிய சூழலில் தொகுதி பங்கீடு அமையும். எப்பொழுதும் தேர்தல் வருகிற போது ஸ்டாலின் தான் சிறுபான்மை மக்களை காப்பதாக கூறுவார்.

ஆனால் இஸ்லாமிய மக்களுக்காக இந்த அரசு என்ன செய்தது? அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருந்த அரசாங்கம் அதிமுக. இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கே பாதுகாப்பில்லை. அப்படிப்பட்ட நிகழ்வுகள் தான் இப்போது தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

இன்றைய முதல்வரை பொறுத்தவரை சிறுபான்மையின மக்களுக்கு திமுகதான் பாதுகாப்பாக இருக்கும் என்ற உணர்வை தூண்டிவிட்டு, ஒரு தோற்றத்தை வெளிப்படுத்தி அவர்களின் ஒட்டுக்களை வாங்குவதற்காக பேசுகிறார்.

திமுகவுக்கு எங்கே பலம் உள்ளது? பலம் இருந்தால் ஏன் புதிது புதிதாக திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அரசாங்கம் மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுத்ததா? இல்லையே?

இந்த 15 நாளில் புதிய, புதிய திட்டங்களை அறிவிக்கிறார், அதற்கு நிதி ஒதுக்கீடு இல்லை... ஆனால் மக்களை ஏமாற்றுகிறார். ஸ்டாலினின் கவர்ச்சிகரமான பேச்சு எடுபடாது. இந்த ஆட்சியில் பார்ப்பது ஊழல் மட்டும்தான். எங்கள் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது, சூழல் இருக்கிறது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நிருபர் ஒருவர், விஜய் கூட்டணிக்கு வரவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இபிஎஸ், இதுவரை அதிமுக அல்லது எங்களின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நீங்கள் குறிப்பிடுகிற (தவெகவை பெயர் சொல்லாமல் குறிப்பிடுகிறார்) அந்த கட்சியோடு எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றார்.

இவ்வாறு இபிஎஸ் பேட்டி அளித்தார்.

Advertisement