கண்ணை இமை காப்பது போல சிறுபான்மை மக்களை காப்பது அதிமுக மட்டுமே: இபிஎஸ்

3

சென்னை: சிறுபான்மை மக்களை கண்ணை இமை காப்பது போல் காக்கும் கட்சி அதிமுக மட்டுமே என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.

அதிமுக சார்பில் 28வது இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

விழாவில் இபிஎஸ் பேசியதாவது;

இன்றைய சூழலில் நம் மனதை மட்டுமின்றி உலகம் முழுக்க மக்கள் மனதை வாட்டும் வகையில், மத்திய கிழக்கில் போர் நடந்துகொண்டிருக்கிறது. அப்பாவி மக்கள், பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் போரால் பாதிக்கப்படுவது இதயத்தை வாட்டுகிறது.

அனைத்து சமயங்களையும் மதிக்கின்ற மக்களைக் கொண்ட, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற கொள்கையைப் பின்பற்றும் மாநிலம் தமிழகம். அதிமுக ஆட்சிக் காலங்களில் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்காக, அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக எண்ணற்ற நலத்திட்டங்களை நாம் செயல்படுத்தினோம்.

2 நாள் கழித்துத்தான் தேர்தல் அறிவிப்பு என்று நாம் நம்பியிருந்தோம், ஆனால், இன்றே வந்துவிட்டது. அதிமுகவைப் பொறுத்தவரை ஓட்டுக்காக அரசியல் செய்யும் இயக்கமல்ல, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இயக்கம். ஆனால் திமுகவும், கூட்டணிக் கட்சியினரும் ஏதோ அவர்கள்தான் சிறுபான்மை மக்களை காப்பாற்றிக்கொண்டிருப்பது போல தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் சிறுபான்மை மக்களை கண்ணை இமை காப்பது போல காப்பது அதிமுக அரசுதான், கட்சியும் அதிமுகதான். அதிமுக மதத்திற்கும், ஜாதிக்கும் அப்பாற்பட்ட இயக்கம். தமிழ் மண்ணில் பிறந்த அனைத்து மக்களுக்கும் தேவையான திட்டங்கள், நன்மைகளைக் கொடுப்பது தான் அதிமுக தலைவர்களின் எண்ணமாக இருந்தது.

இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Advertisement