நாளை சென்னை வருகிறார் பியூஷ் கோயல்; அதிமுகவுடன் இறுதியாகிறது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்

3

சென்னை: அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்காக, தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் நாளை சென்னை வருகிறார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு தேதி அறிவிக்கப்பட்ட சூழலில், தேர்தல் பணிகளை களத்தில் இருக்கும் கட்சிகள் தீவிரப்படுத்தி இருக்கின்றன. ஆளும் திமுக தமது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சு நடத்தி தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது. அதிமுக தரப்பில், பாஜவுடன் தொகுதி பங்கீடு இன்னமும் கையெழுத்தாகவில்லை. விரைவில் அது தொடங்கும் என்று இருகட்சியின் நிர்வாகிகளும் எதிர்பார்த்துள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் நாளை (மார்ச் 19) சென்னை வருகிறார். அவரது வருகையால் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் உடன் பேச்சு நடத்தி, தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

நாளைய தினம் பேச்சு முடிந்த பின்னர், மார்ச் 20ம் தேதி தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் வாய்ப்புகள் இருப்பதாக கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூறியுள்ளனர். இம்முறை 30 தொகுதி வரை கேட்டு பெறும் சூழல் இருப்பதாகவும், தலைநகர் சென்னையில் முக்கிய தொகுதிகளில் பாஜ போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாகவும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

மார்ச் 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்க இருப்பதால், அடுத்த ஒரு சில நாட்களில் அனைத்து முக்கிய முடிவுகளையும் அனைத்துக் கட்சிகளும் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement