மனைவியை கொன்று தற்கொலை ஏன்? வீடியோ வெளியிட்டு கணவன் உருக்கம்
திருப்பூர்: குடும்ப பிரச்னையில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு, தற்கொலை செய்த கணவர், இறப்பதற்கு முன் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
திருப்பூர், வீரபாண்டி, டி.கே.டி. மில் பகுதி சக்தி அப்பார்ட்மென்டை சேர்ந்தவர் செந்தில்குமார், 43. இவரின் மனைவி சத்யா, 41. தம்பதிக்கு 10ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். தம்பதிக்கு இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்தது. சில நாட்களுக்கு முன், மகளுக்கு தேர்வு முடிந்த நிலையில், உடுமலை வாவிபாளையத்தில் உள்ள தாத்தா வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில், 17ம் தேதி இரவு தம்பதிக்கு இடையே குடும்ப பிரச்னை வெடித்தது. அதில், சத்யாவை வெட்டி கொன்ற செந்தில்குமார், துாக்கில் தற்கொலை செய்து கொண்டார். வீரபாண்டி போலீசார் விசாரணையில், தற்கொலைக்கு முன்னதாக, செந்தில்குமார் கடிதம் எழுதியதும்,முன் வீடியோ ஒன்றை பதிவு செய்து, உறவினர்களுக்கு அனுப்பியது தெரிந்தது. தற்போது, அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில், 'கடந்த, மூன்று ஆண்டுகளாக உயிருடன் இறந்தேன். இன்றைக்கு உயிர் இல்லாமல் இறக்க உள்ளேன். மாமனார், மாமியார், மைத்துனர், அவரது மனைவி ஆகியோர் துாண்டுதலின் பேரில், எனது குடும்பம் சீரழித்து வாழ்க்கை முடிந்து விட்டது. அவர்களால், மிகுந்த வேதனையால், இந்த முடிவை எடுக்கிறேன். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். 17 ஆண்டுகளாக, ஒரு நாள் கூட, எனது பேச்சை கேட்டது கிடையாது,' என்று கூறியுள்ளார்.
தற்போது, இந்த வீடியோ வைரல் காரணமாக, செந்தில்குமார் குற்றம்சாட்டிய குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.