திருப்பூரில் துணி, நுால் கண்காட்சி

திருப்பூர் திருப்பூரில் ஜவுளி தொழில் துறைக்கான, நுால், துணி மற்றும் அக்சசரீஸ் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் பங்கேற்கும் 'டிரேட் ஷோ 2026' நேற்று துவங்கியது.

திருப்பூர், அவினாசி - பழங்கரை ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று 'டிரேடு ஷோ 2026' கண்காட்சியில், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி துறைக்கான நுால் துணி மற்றும் அக்சசரீஸ் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள், நுாற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்துள்ளன. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சி வரும், 21ம் தேதி வரை நடக்கிறது.

கண்காட்சி அமைப்பாளர்கள் அபிஷேக் சர்மா மற்றும் அங்கூர் கோயல் கூறியதாவது:

நுால், துணி மற்றும் அக்சசரீஸ் சப்ளையர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் வாங்குவோரை இணைக்கும் முக்கியமான தளமாக இக்கண்காட்சி அமையும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆர்டர்களுக்கு சாம்பிள் தயார்படுத்தவும், அதற்கான மூலப்பொருட்களை தேர்வு செய்யும் வேலையையும் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் துவக்கியுள்ளன.

அதற்கு இந்த கண்காட்சி மிகவும் உதவிகரமாக இருக்கும்.

நாட்டின் பல்வேறு முன்னணி மற்றும் பிரபல நிறுவனங்கள், புதிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ள இக்கண்காட்சியில், தென்னிந்திய அளவிலான ஜவுளி உற்பத்தியாளர்கள் பார்வையிட்டு வர்த்தக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement