திண்டிவனம்  தொகுதியில் எந்த கட்சி போட்டியிடும் சின்னம் வரைவதில் சுணக்கம்

திண்டிவனம் (தனி) தொகுதியில், தற்போது அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அர்ஜூனன் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவரை எதிர்த்து கடந்த 2021ல் போட்டியிட்ட தி.மு.க.,வைச் சேர்ந்த சீத்தாபதி சொக்கலிங்கம், 9,773 ஓட்டுகள் குறைவாக பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.

கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், திண்டிவனம் தொகுதியில் மட்டும் அ.தி.மு.க.,கூட்டணியை விட 22 ஆயிரம் ஓட்டுகள் தி.மு.க.,கூட்டணி சார்பில் போட்டியிட்ட வி.சி.,கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் பெற்றிருந்தார்.

இதனால் தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திண்டிவனம் தொகுதி தி.மு.க.,விற்கு சாதகமாக இருக்கும் என்று உளவுத்துறை சார்பில் அக்கட்சியின் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னையில் நடந்த நேர்காணலில் முதல்வர் ஸ்டாலினிடம், தி.மு.க., சார்பில் விருப்பு மனு கொடுத்த 59 பேரும் திண்டிவனம் தொகுதியை தி.மு.க.,விற்கு ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

முதல்வரும் பாசிட்டிவான பதிலை கூறி, தேர்தல் வேலையை ஒற்றுமையாக பாருங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே செஞ்சி, மயிலம் தொகுதியில் வேட்பாளர் பெயர் இல்லாமல், தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தை வரைந்து சுவர் விளம்பரம் செய்துள்ளனர்.

ஆனால் திண்டிவனம் தொகுதியில் மட்டும் தி.மு.க.,வினர் சுவரை ரிசர்வ் செய்து விட்டு, கட்சி தலைமை திண்டிவனம் தொகுதியை தி.மு.க.,விற்கு ஒதுக்குமா அல்லது கூட்டணி கட்சியான வி.சி.,கட்சிக்கு ஒதுக்குமா என்ற அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே வி.சி., கட்சியினர் வானுார் தொகுதியில் போட்டியிடும் நோக்கத்தில் உள்ளதால், திண்டிவனம் தொகுதியில் போட்டியிடுவதற்கு அவ்வளவாக முயற்சி எடுக்காமல் இருக்கின்றனர்.

இதனால் திண்டிவனம் தொகுதியில் தி.மு.க.,வினர் ஸ்டாலின் மகளிர் படையினர் மூலம் வீடு வீடாக அரசின் திட்டங்கள், சாதனைகளை புத்தக வடிவில் கொடுத்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement