இதே நாளில் அன்று

மார்ச் 24:

மதுரையில், சவுராஷ்டிரா குடும்பத்தில், தொகுளுவ மீனாட்சி அய்யங்கார் - வேங்கடம்மாள் தம்பதியின் மகனாக, 1922ல், இதே நாளில் பிறந்தவர், டி.எம்.சவுந்தரராஜன்.
மதுரை செயின்ட் மேரீஸ், சவுராஷ்டிரா பள்ளிகளில் படித்த போதே, தந்தையுடன் பஜனை பாடல்கள் பாடினார். காரைக்குடி ராஜாமணியிடம் கர்நாடக சங்கீதம் கற்றார். கச்சேரிகளில், தியாகராஜ பாகவதர் பாடல்களை பாடி புகழ் பெற்றார்.

கிருஷ்ண விஜயம் என்ற படத்தில், 'ராதே நீ என்னை விட்டு போகாதடி' என்ற பாடலை பாடி, பின்னணி பாடகரானார். தொடர்ந்து, மந்திரி குமாரி, தேவகி உள்ளிட்ட படங்களில் பாடி பிரபலமானார்.

சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆரின் நடிப்புக்கு ஏற்ப தன் குரலை மாற்றிப் பாடி முத்திரை பதித்தார். ஜெமினி, முத்துராமன், ரஜினி, கமல், சிவகுமார் உள்ளிட்டோருக்கும் பாடினார். 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடினார்.

'கலைமாமணி, பத்மஸ்ரீ' உள்ளிட்ட விருதுகளை பெற்றவர், தன் 91வது வயதில், 2013, மே 25ல் மறைந்தார்.

டி.எம்.எஸ்., பிறந்த தினம் இன்று!

Advertisement