கடலோர தனியார் விடுதிகள் முன் அனுமதியில்லாமல் பாறை கற்கள் குவிப்பு
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கோவளம் கடற்கரை அன்சாரி நகர் அருகில் தனியார் விடுதிகள் உள்ளன. இப்பகுதியில், ஏற்படும் கடலரிப்பால், விடுதி கட்டடங்கள் பாதிக்கப்படுவதாக கருதி, ஒரு சில விடுதி நிர்வாகத்தினர், விடுதியை ஒட்டிய கடற்கரையில், பாறை கற்களை குவித்து வருகின்றனர். முறையான அனுமதி இல்லாமல் முறைகேடாக கற்கள் குவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
கோவளம் அன்சாரிநகரில் 1000 இஸ்லாமிய குடும்பத்தினர், செம்மஞ்சேரி குப்பம், கோவளம் குப்பத்தில் 1500 மீனவர் குடும்பத்தினர் உள்ளனர். இங்கு 15 ஆயிரத்திற்கும் மேல் உள்ளனர்.
இந்த நகரில் அதிக தனியாற் விடுதிகள் உள்ளன. இங்கு வெளியிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து தங்கி செங்கின்றனர். கடலரிப்பு தடுக்காதவகையில் விடுதி உரிமையாளர் கடலோரம் கற்களை கொட்டி வருகின்றனர். முறையான அனுமதி இல்லாமல் கற்கள் கொட்டப்படுகின்றன. ஏற்கனவே, முட்டுக்காடு உள்ளிட்ட கடலேரா பகுதிகளில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில், அனுமதியில்லாமல் சில விடுதி நிர்வாகத்தினர், விடுதியை ஒட்டிய கடற்கரையில், பாறைக்கற்களை குவித்து வருவதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து தடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.