தொண்டர்களுக்கு உணவு தயாரிப்பு வாடகை பாத்திரங்களுக்கு 'கிராக்கி'
விருத்தாசலம்: பிரசாரத்தில் பங்கேற்கும் தொண்டர்கள் பசியாற, மதிய உணவை அரசியல் கட்சிகளே சமைத்து தர இருப்பதால் வாடகை பாத்திரங்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
தி.மு.க., - அ.தி.மு.க., அதன் வேட்பாளர்களையும், கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதிகளையும் அறிவித்து முடித்தன.
அதன்படி, மாவட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., - காங்., - மனிதநேய ஜனநாயக கட்சி - வி.சி., ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் களப்பணியில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அரசு சுவர்கள், பாலங்கள், கல்வெர்ட்டுகளை தவிர்த்து நகர, கிராமங்களில் வீட்டு உரிமையாளரின் அனுமதியுடன் கட்சிகளின் சின்னங்கள் வரையப்பட்டு வருகின்றன.
விரைவில் பிரசாரம் துவங்கும் போது வேட்பாளருடன் அந்தந்த கட்சிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான தொண்டர்கள் கார், பைக், சைக்கிள்களில் ஊர்வலமாக வந்து, ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபடுவர்.
காலை 9:00 மணிக்கே வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருப்பதால், பிரசாரத்தில் குளிர்பானம் துவங்கி, மதிய உணவு, டீ, திண்பண்டங்கள் ஆகியவை வழங்கப்பட உள்ளது.
இவற்றை அவ்வப்போது கடைகளில் வாங்கும் போது செலவு அதிகமாகும். மேலும், பொட்டலங்களில் கட்டப்பட்ட உணவு வெயில் நேரத்தில் விரைவில் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.
இதனால் குறிப்பிட்ட இடங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் மதிய உணவை தயாரித்து, பிரசாரத்தில் ஈடுபடும் தொண்டர்களுக்கு பரிமாறப்பட உள்ளது.
இவ்வாறு தருவதால் சுடச்சுட மதிய உணவு கிடைப்பதுடன், அவரவரின் தேவைக்கு தகுந்தாற்போல வழங்கலாம். இதற்காக, சமையல் மாஸ்டர்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட உள்ளது.
அதில், முதற்கட்ட பிரசாரங்களில் பிரியாணி, முட்டை, சாதம், குழம்பு, ரசம், மோர், கூட்டு பொறியல் போன்றவையும், அதற்கடுத்து தயிர், எலுமிச்சை, புளி, கீரை போன்ற பட்டை சாதங்களும் வழங்கப்பட உள்ளன. இதற்காக தனித்தனி பாத்திரங்கள், துணிப்பந்தல் ஆகியவற்றை வாடகைக்கு எடுக்க முடிவு செய்துள்ளதால், வாடகை பாத்திரக்கடைகள் பிசியாகி விடும் என, அரசியல் கட்சி நிர்வாகிகள் உற்சாகத்துடன் கூறி வருகின்றனர்.