தையல்காரருக்கு அரிவாள் வெட்டு: மாணவர்கள் ஐவர் கைது

நாகர்கோவில்: வாய் தகராறில் ஏற்பட்ட விபரீதத்தில் தையல்காரரை அரிவாளால் வெட்டிய கல்லுாரி மாணவர்கள் இருவர் , பள்ளி மாணவர்கள் மூவர் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் கோவில்தாஸ் 33. தற்போது நாகர்கோவில் கிறிஸ்து நகர் பகுதியில் வசித்து வரும் இவர் தட்டான்விளையில் தையல் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் கடையை பூட்டி விட்டு ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது அங்கு நின்ற ஏழு பேர் கொண்ட கும்பல் இவரை கிண்டல் செய்து தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளது.

இதை கோவில்தாஸ் தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் கோவில்தாசை சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டியது. இதில் காயமடைந்த அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொதுமக்கள் திரண்டதால் அவர்கள் தப்பி ஓடினர்.

இச்சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் கோணம் அரசு கல்லுாரியில் படிக்கும் இரண்டு மாணவர்கள் மற்றும் 16 மற்றும் 15 வயதுடைய பள்ளி மாணவர்கள் மூன்று பேர் என ஐந்து பேரை வடசேரி போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவித்தனர். மேலும் பள்ளி மாணவர்களை இருவரை தேடிவருகின்றனர்.

Advertisement