வடகோவையில் தண்டவாள பணி: போத்தனுார் வழியாக ரயில்கள் இயக்கம்

கோவை: வடகோவை ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாள பணிகள் நடக்கின்றன. இதையடுத்து, கடந்த 25ம் தேதி முதல் கோவை வழி ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரயில்கள் வடகோவை ஸ்டேஷன் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

நேற்று, பணிகள் காரணமாக கோவை வழியாக இயக்க வேண்டிய 13 ரயில்கள் இருகூரில் இருந்து போத்தனுார் வழியாக இயக்கப்பட்டன. கோவை-சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ்(12244) போத்தனுாரில் இருந்து புறப்பட்டு இருகூர் வழியாக சென்றது.

அதேபோல், கோவை-சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ்(12676), கோவை-எச்.நிஜாமுதீன் கொங்கு எக்ஸ்பிரஸ்(12647) போத்தனுாரில் இருந்து புறப்பட்டன. திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ்(16843) கோவை செல்லாது போத்தனுார் வழியாக சென்றது.

சென்னை சென்ட்ரல்-சதாப்தி எக்ஸ்பிரஸ்(12243), ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ்(13352), எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர்., பெங்களூரு இன்டர்சிட்டி(16378), திருநெல்வேலி-பிலாஸ்பூர்(22620) உள்ளிட்ட ரயில்கள் இருகூரில் இருந்து கோவை செல்லாது போத்தனுார் வழியாக இயக்கப்பட்டன. பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement