தமிழகம் முழுதும் வேட்புமனு பரிசீலனை; ஸ்டாலின், பழனிசாமி, விஜய் மனு ஏற்பு

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட, 7,599 வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது.

தமிழக சட்டசபை தேர்தல், வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் தாக்கல், மார்ச் 30ம் தேதி துவங்கி, கடந்த 6ம் தேதி வரை நடந்தது. இதில் போட்டியிட மொத்தமாக, 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், அவற்றின் மீதான பரிசீலனை நேற்று காலை 11:00 மணிக்கு துவங்கியது. மாநிலம் முழுதும் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அப்போது, வேட்பாளர்கள், அவரது கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கொளத்துார் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஸ்டாலின், இடைப்பாடி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் த.வெ.க., தலைவர் விஜய், காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இவர்கள் உட்பட, நேற்று இரவு 9:30 மணி நிலவரப்படி, 4,472 மனுக்கள் ஏற்கப்பட்டதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

மேலும், 11 மனுக்கள் திரும்ப பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனுக்களை திரும்ப பெறுவதற்கு, நாளை வரை அவகாசம் உள்ளது. மாற்று வேட்பாளர்களும், சுயேச்சைகளும் மனுக்களை வாபஸ் பெறவுள்ளனர்.

Advertisement