ஆன்லைனில் பட்டுக்கூடு ஏலம்; விவசாயிகளுக்கு நல்ல லாபம்

கோவை: ஆன்லைன் மூலம் பட்டுக்கூடு ஏலம் விடும் புதிய முறைக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பாலசுந்தரம் ரோட்டில் உள்ள பட்டுக்கூடு விற்பனை அங்காடிக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி, உடுமலை, திண்டுகல் மற்றும் தேனியில் இருந்து பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வருகின்றன. மாதம், 25 டன் பட்டுக்கூடு விற்பனைக்கு வருகிறது. நேரடி ஏலம் முறையில் தினமும் விலை நிர்ணயிக்கப்பட்டு வந்தது. தற்போது ஆன்லைன் மூலம் பட்டுக்கூடு ஏலம் விடும் நடைமுறை அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் எப்பகுதியில் இருந்தும் ஏலம் எடுக்கும் வசதி ஏற்பட்டுள்ளது. இதனால், ஏலம் கோரும் ரீலர்களின் எண்ணிக்கை அதிகரித்து, பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'தமிழகத்தில் உள்ள 18 அங்காடிகளில் கோவை, சேலம், தர்மபுரி மற்றும் தென்காசியில், ஆன்லைன் முறை வந்துள்ளது. பிற அங்காடிகளும் விரைவில் இம்முறைக்கு மாற உள்ளன. பட்டுக்கூடுகள் இரு தரங்களில், பிரித்து, பெட்டிகளில் வைக்கப்படும். அதற்கான எண்களும், குறைந்த பட்ச விலையும் குறிப்பிடப்படும். இந்த எண்கள் அடிப்படையில், ரீலர்கள் ஏலம் கோருவர். நேரில் வருவதை தவிர்த்து தற்போது இருந்த இடத்திலிருந்து விரும்பிய விலைக்கு ஏலம் எடுக்க முடியும். பட்டு நுாலுக்கு தேவை அதிகம் இருக்கும் போது, ஏலத்தில் போட்டி ஏற்பட்டு, அதிக விலை கிடைக்கிறது. கோவையில், 16 ம் தேதி முதல் ஆன்லைன் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள தொழில்நுட்ப பிரச்னைகள் விரைவில் சரி செய்யப்படும்,' என்றனர்.

விவசாயிகள் மற்றும் ரீலர்கள் கருத்து:* ஆன்லைனில் அதிகம் லாபம் இருக்கிறது. நேரில் கிலோ, ரூ.720 க்கு விற்கப்படும் கூடு, ஆன்லைனில், ரூ.820 க்கு விற்கிறது. பணம் சரியாக கிடைத்தால் போதும்.

சதீஸ்குமார், விவசாயி

* இங்கு நடக்கும் ஏலத்தில் கூடும் எடுக்கும் ரீலர்கள் குறைவு. அதிகம் டிமாண்டு இருக்கும் போது கூட விலை அதிகம் கொடுப்பதில்லை. ஆன்லைனில் ரீலர்ஸ் அதிகம் பங்கேற்பதால் நல்ல விலை கிடைக்கிறது.

கருப்புசாமி, விவசாயி * ஆன்லைன் ஏலத்தில் காலதாமதம் ஏற்படுகிறது. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.

தவ்கிர் பாஷா, ரீலர்

* கோவைக்கு ஆன்லைன் முறை ஒத்துவராது. அதிகளவு கூடு வேண்டும் எனில், ஆன்லைனில் எடுக்க முடியாது. நேரில் வந்து ஏலம் எடுத்தால் தான் விலை குறைவாக கிடைக்கும். விலை எங்களுக்கு கட்டுபடியாகாது. வெளியூர் ரீலர்களுக்கு இது வசதியாக உள்ளது.

ஷாகிர், ரீலர்

Advertisement