கூடுதல் நாட்கள் நீர் தேவை:  விவசாயிகள் கோரிக்கை 

உடுமலை: வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மண்டல பாசனத்தில், கூடுதல் நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும் என பி.ஏ.பி., விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்துக்கு, ஜன., 24ல் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கோவை, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட 94 ஆயிரத்து 521 ஏக்கர் நிலங்கள் இந்த மண்டலத்தில் பாசன வசதி பெற்று வருகின்றன.

வழக்கத்தை விட அதிக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், நிலைப்பயிராக உள்ள மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பாதித்துள்ளது. தென்னந்தோப்புகளிலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, மரங்களுக்கு பாசன நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, இந்த மண்டல பாசன காலத்தில், வெயிலின் தாக்கத்தால், ஒவ்வொரு மடையிலும், நீர்நிர்வாகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால், வரும் சுற்றுகளில், அனைத்து கிளை கால்வாய்களிலும் கூடுதல் நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும். இது குறித்து பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement