முதுகலை பட்டப்படிப்பில் தங்க பதக்கம் வென்ற சந்தியா

- நமது நிருபர் -:

உலகின் தலைசிறந்த ஆயுதம் கல்வி என்பதை படித்திருப்போம். வறுமையில் இருப்பவர்களும் சமூகத்தில் நல்ல அந்தஸ்திற்கு வர கல்வியே ஒரே வழி. இதனாலேயே, வறுமையில் வாடும் எத்தனையோ தாய்மார்கள், தங்கள் தாலியை அடகுவைத்தாவது தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்த கதைகளை கேட்டிருப்போம். அதுபோல, கஷ்டப்பட்டு முதுகலை பட்டம் வாங்கிய ஏழை மாணவியின் கதையை காண்போம்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரை சேர்ந்தவர் சந்தியா, 25. இவர் மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர். தினமும் மூன்று வேளை சாப்பாடு கிடைப்பதே பெரும் போராட்டம். தந்தை கூலி தொழிலாளி, தாய் பீடி சுத்தும் வேலை செய்கிறார்.

சந்தியா, தன் சிறுவயதில் இருந்தே தாய், தந்தை படும் கஷ்டத்தை நேரடியாக பார்த்து வளர்ந்தார். எப்படியாவது படித்து பலரும் மதிக்கும் படியான பொறுப்புக்கு வர வேண்டும் என முடிவு செய்தார்.

கவனம் சந்தியா சிறுவயதில் இருந்தே வீட்டில் உள்ள வேலைகளை செய்து வருகிறார். மாடு மேய்ப்பது, பால் கறப்பது போன்ற வேலைகளை தற்போதும் செய்து வருகிறார்.

இதனால், இவரை சிலர் கேலி செய்வதும் வாடிக்கை. இருப்பினும், அவர் தனது பணியில் மட்டுமே கவனம் செலுத்துவார். இவர், பள்ளி படிப்பை அரசு உயர்நிலை பள்ளியிலேயே படித்து முடித்தார்.

பல சிரமங்களை கடந்து பி.எஸ்.சி., நர்சிங் படிப்பில் சேர்ந்தார். பள்ளியில் கன்னட வழியில் படித்துவிட்டு, கல்லுாரியில் ஆங்கில வழிக்கல்வி என்பதால் படிக்க முடியாமல் திணறினார். அப்போது, அவருடைய உண்மையான நண்பர்கள் உதவினர். ஆசிரியர்களும் உதவினர்.

சாதனை சோதனைகளை சாதனைகளாக்கி ஒரு வழியாக பட்டப்படிப்பை முடித்தார். இருப்பினும், அவருக்கு மேலும் படிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது.

அதுவும், தன் தாய் மொழியான கன்னடாவில் முதுகலை பட்டம் பெற முடிவு செய்தார். இந்த முடிவில் தீர்க்கமாக இருந்தார். பின், மங்களூரு பல்கலைக்கழகத்தில் 2024ல் எம்.ஏ., கன்னடம் படிப்பில் சேர்ந்தார். தாய்மொழியான கன்னடாவில் புகுந்து விளையாடினார்.

ஆசிரியருக்கு பாடம் எடுக்கும் அளவுக்கு தனது திறமைகளை வெளிக்காட்டினார். அதே சமயம், தினமும் வீட்டு வேலைகளையும் செய்து வந்தார். படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினார். இதன் விளைவாக எம்.ஏ., கன்னடத்தில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றார்.

மேலும், தங்க பதக்கத்தையும் பெற்றார். மங்களூரு பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பங்கேற்றார்.

அவரது கையால் சந்தியா பட்டம் பெற்றார். இது, சந்தியாவின் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறியது.

இது குறித்து, அவர் கூறுகையில், “எனக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றி. கடினமான நேரங்களில் உறுதுணையாக இருந்த என் பெற்றோருக்கு நன்றி. என் கனவு நிறைவேறிவிட்டது. என் பெற்றோரை பார்த்து கொள்வது தான் எனது ஒரே லட்சியம்,” என்றார்.

Advertisement