மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ரூ.40 கோடியில் தனியார் பெயர்

பெங்களூரு: மெட்ரோ ரயில் நிலையத்துக்கு தனியார் நிறுவனத்தின் பெயரை சூட்டுவதற்கு, 40 கோடி ரூபாயில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு மெட்ரோ ரயில்வே நிர்வாகம் பல வழிகளில் வருவாய் ஈட்டி வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தனியார் நிறுவனங்களின் பெயரை வைப்பதன் மூலமும் வருவாய் ஈட்டுகிறது.

ஏற்கனவே, ஹெப்பகோடி, பெல்லந்துார், எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய ரயில் நிலையங்களுக்கு தனியார் நிறுவனங்களின் பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன. இப்படி தனியார் நிறுவனங்களின் பெயரை சூட்டுவதன் வாயிலாக மெட்ரோ நிர்வாகம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகிறது.

இவ்வகையில், டி.ஆர்.டி.ஓ., ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு தனியார் நிறுவனத்தின் பெயரை சூட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு 'பாக்மனே' (bagmane) என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இது குறித்த ஒப்பந்தம் கடந்த 27ம் தேதி மெட்ரோ நிர்வாக இயக்குநர் ரவிசங்கர் முன்னிலையில் நடந்தது. ரயில் நிலையத்துக்கு பெயர் சூட்ட, 40 கோடி ரூபாயை பாக்மனே தனியார் நிறுவனம் வழங்க ஒப்பந்தம் ஆகி உள்ளது.

முதல் கட்டமாக 20 கோடி ரூபாய் மெட்ரோ நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த பெயரை 20 ஆண்டுகள் வைத்திருக்க தனியார் நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.

மேலும் இரண்டு மெட்ரோ நிலையங்களுக்கு தனியார் நிறுவனங்களின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement