கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வழக்கு பதில் கோரும் உயர்நீதிமன்றம்
மதுரை: தமிழக கடலோர மாவட்டங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனுதாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை புஷ்பவனம் தாக்கல் செய்த பொதுநல மனு: மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்ட கடல் பகுதியில் அமைந்துள்ளது. பவளப்பாறைகள், கடல் தாவரங்கள், மீன் வகைகள், கடல்பசு போன்ற பல்லுயிர் வளம் கொண்டது. இப்பகுதியில் வணிக ரீதியாக மீன் பிடிக்கின்றனர். மீண்டும் பயன்படுத்த முடியாத மீன்பிடி வலைகளை கடலில் சிலர் வீசிச் செல்கின்றனர்.
பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கின்றன. கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் பயனற்ற மீன் வலைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி கடற்பகுதியை துாய்மையாக பராமரிக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. மன்னார் வளைகுடா பகுதியில் தேங்கியுள்ள பயனற்ற பழைய வலைகளை அகற்ற வேண்டும். கேரளாவை பின்பற்றி தமிழக கடலோர மாவட்டங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
மத்திய, மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர்கள், மன்னார் வளைகுடா தேசிய உயிரின பூங்கா பாதுகாவலர் 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி என்.சதீஷ்குமார் அமர்வு உத்தரவிட்டது.