சர்வதேச டேபிள் டென்னிஸ் :நிகில், ஸ்ரியா சாதனை

சென்னை: சர்வதேச அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், சென்னையை சேர்ந்த நிகில் மேனன், ஸ்ரியா ஆனந்த் இருவரும் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

தென்கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள செர்பியா நாட்டில், சர்வதேச அளவிலான டபிள்யூ.டி.டி., டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது. போட்டியில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் - வீராங்கனையர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.

இதில், 17 வயதுக்கு உட்பட சிறுவர்கள் ஒற்றையர் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த சென்னை வீரர் நிகில் மேனன் சிறப்பாக விளையாடி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

அவர், இறுதிபோட்டியில், உலக தரவரிசையில் 19வது இடத்தில் உள்ள, 'தைபே' வீரர் லின் சிங் என்பவரை எதிர்கொண்டு, வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.

அதேபோல், 19 வயதுக்கு உட்பட பெண்கள் ஒற்றையர் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த சென்னை வீராங்கனை ஸ்ரியா ஆனந்த், ருமேனியா நாட்டு வீராங்கனை அலிசியாவிடம் தோற்று, வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார். இருவரும், ஏற்கனவே பல்கேரியாவில் நடந்த கலப்பு இரட்டையர் போட்டியில், வெண்கல பதக்கம் வென்றிருந்தனர்.

Advertisement