18ம் நுாற்றாண்டின் ‛ராஜாக்கால்' காஞ்சி சுரங்கநீர் வழித்தடம் மறைந்துவிட்டது; வரலாற்று ஆய்வு மைய தலைவர் ஆதங்கம்

காஞ்சிபுரம்:‛சித்தக்கோணி ராவ்' உருவாக்கிய, ‛ராஜக்கால்' நீர் வழித்தடம் மண்ணோடு மண்ணாகிவிட்டது என, வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் அஜய்குமார் கூறியதாவது:

காஞ்சிபுரம், 18ம் நுாற்றாண்டில் ஆன்மிகம் மற்றும் வணிக மையமாக திகழ்ந்தது. இங்கு, வசிக்கும் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கு மக்களின் வருகைக்கு ஏற்ப குடிநீர் வினியோகம் செய்வது பெரும் சவாலாக இருந்துள்ளது.

இந்த சூழலில், 1792ல் ஹைதராபாத் நிஜாம் அரச பிரதிநிதியாகவும், காஞ்சியின் திவானாக இருந்த,‛சித்தகோணி ராவ்' என்பவர் காஞ்சிபுரம் குடிநீர் தேவை தீர்க்க, திறந்தவெளி மற்றும் நிலத்தடியில் செல்லும் வகையில், ‛ராஜாக்கால்' என்கிற பெயரில், மேம்படுத்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நகருக்கு கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டு வந்துள்ளார்.

குறிப்பாக, பாலாற்றின் ஊற்று நீரை அம்பி குளத்தில் சேகரித்து, துல்லிய சரிவு மூலமாகவும். நகரின் நுழைவு பகுதியில் சுட்ட செங்கல், பானை ஓடுகளால் ஆன, சுரங்க நீர் வழித்தடம் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.

இந்த நீர் வழித்தடத்தில் இருந்து பெறப்படும் தண்ணீர், 35 சதவீதம் கோவில் குளங்கள் தண்ணீர் சேகரிக்கவும்; 25 சதவீதம் விவசாய பயன்பாட்டிற்கும்; 40 சதவீதம் பொது மக்கள் மற்றும் பிற தேவைகளின் பயன்பாட்டிற்கு என, வகை பிரித்து, தண்ணீரை வினியோகம் செய்துள்ளார்.

கடந்த, 1879ல் சி.எஸ். குரோல் எழுகிய ‛தி செங்கல்பட்டு லேட் மெட்ராஸ் வழிகாட்டி புத்தகத்தில்' ராஜக்கால் குறித்த பதிவு உள்ளது.

அவுரங்கபாதில் மாலிக் ஆம்பர் என்பவரால், 1617ல் அமைக்கப்பட்ட நிலத்தடி நீர் கால்வாய் மற்றும் பர்ஹான்பூரில் கூனி பண்டாரா என்பவரால், 1615ல் இதேபோன்ற முறையில் உருவாக்கப்பட்ட நீர் வழித்தடங்களை காட்டிலும்,‛ ராஜக்கால்' அன்றைய தொழில் நுட்பத்தில் தலை சிறந்ததாக விளங்கியுள்ளது.

மேலும், காஞ்சிபுரம் ‛காமாட்சி பேட்டை' மற்றும் பல்வேறு கோவில் குளங்களின் நீராதாரமாக இருந்துள்ளன. மேலும், விவசாயத்தை சிறப்புற செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மக்களின் தாகமும் தீர்க்கும் வகையில் இருந்துள்ளது.

கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் போது, இந்த நீர் வழித்தடத்தை புதுப்பித்தால் போதும் என, 1870 - -95 வரை அன்றைய நகர சபையில் பொது சொத்தாக விவாதிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான வளர்ச்சிக்கு பின், கட்டடம் மற்றும் கட்டுமான வளர்ச்சி பணிகளில் மேல் ஓங்கியதால். இரு நுாற்றாண்டுகளுக்கு முன் இருந்த நீர் வழித்தடம் எங்கே உள்ளது என, தெரியாத அளவிற்கு மறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement