25 லட்சம் டன் யூரியா இறக்குமதி : சர்வதேச டெண்டர் வெளியீடு

புதுடில்லி: மேற்காசிய போர் எதிரொலியாக வரும் கரீப் பயிர் சீசனை எதிர்கொள்ள 25 லட்சம் டன் யூரியா வாங்க மத்திய அரசுக்கு சொந்தமான 'இந்தியன் பொட்டாஷ்' நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இந்நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

நம் நாட்டில் யூரியா அதிகளவில் இறக்குமதி செய்கிறோம். மேற்காசியாவில் தொடரும் போரால் மத்திய அரசு இருப்பு வைக்க 25 லட்சம் டன் யூரியா வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த சனிக்கிழமை டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

டெண்டர் குறித்தான அறிவிப்பை எங்கள் இணையதளத்தில் பதிவேற்றி இருக்கிறோம்.

உள்ளூர் யூரியா தேவையை பூர்த்தி செய்ய சர்வதேச டெண்டர் அறிவிக்கப்படுவது வழக்கம். மேற்காசிய போருக்கு பின் முதன்முறையாக டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம், இன்னும் இரண்டு மாதங்களில் நெல், மக்காச்சோளம், சோயாபீன்ஸ் விதைப்பு துவங்கி விடும்.

மேற்காசிய போர் துவங்கிய பின் உலகளவில் யூரியாவின் விலை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 45 சதவீத யூரியா ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருகிறது. தொடர்ந்து அது மூடப்பட்டிருந்தால் விலை மேலும் உயரும்.

இவ்வாறு தெரிவித்து உள்ளன.

தேவைப்படும் உரத்தின் அளவு

(ஜூன் - செப்டம்பர்)

3.90 கோடி டன்

ஆரம்ப கையிருப்பு

1.80 கோடி டன்

இறக்குமதி

25 லட்சம் டன்

 சர்வதேச அளவிலான டெண்டருக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 15

 ஜூன் 14க்குள் யூரியா வெளிநாட்டு துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதியாக வேண்டும்.

Advertisement