விருதுநகர் வேட்புமனு தாக்கலின் போது தி.மு.க., - அ.தி.மு.க., தள்ளுமுள்ளு
விருதுநகர்: விருதுநகரில் நடந்த வேட்புமனு தாக்கலின் போது ஒரே நேரத்தில் வந்த அ.தி.மு.க., தி.மு.க.,வினர் இடையே வாக்குவாதம், தள்ளமுள்ளு ஏற்பட்டது.
விருதுநகரில் நடந்த வேட்பு மனு தாக்கலில் நல்ல நேரமான மதியம் 12:00 மணி முதல் 2:00 மணிக்குள் பெரிய கட்சிகள் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. மதியம் 12:30 அ.தி.மு.க., வேட்பாளர் வி.ஜி.கணேசன் கட்சியினருடன் ஊர்வலமாக வந்து தாலுகா அலுவலகத்தில் இருந்து நுாறு மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டனர். கட்சியினர் பேரிகார்டு முன் காத்து நின்ற போது அடுத்து 1:00 மணிக்கு தி.மு.க., கூட்டணி வேட்பாளரான தே.மு.தி.க., விஜயபிரபாகரன், அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் வந்தார். வேட்பாளர், அமைச்சர், இன்னும் சிலர் காரில் அலுவலகம் வரை செல்ல பாஸ் வாங்கியிருந்தனர். அவர்கள் முன்னே வந்த போது அ.தி.மு.க.,வினர், அமைச்சருடன் வருவதால் அவர்களை மட்டும் அனுமதிக்கிறீர்களா என்றனர். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க., வேட்பாளர் கார் பாஸ் வாங்கியிருந்த பட்சத்திலும் நடந்து சென்றதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பமான சூழல் நிலவியது. இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் வைத்த பேரிகார்டை தாண்டினர்.
விஜயபிரபாகரன், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோரை பாதுகாப்பாக தாலுகா அலுவலகத்திற்குள் போலீசார் அழைத்து சென்றனர். வெளிப்புறத்தில் தள்ளுமுள்ளு தொடர்ந்த நிலையில், போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்தனர்.
தள்ளுமுள்ளுவை தடுக்க முயன்ற போது டி.எஸ்.பி., யோகேஷ் குமார் 'நேம் பேட்ஜ்' சரிந்தது. விஜயபிரபாகரன் மதியம் 1:30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்து அங்கிருந்து புறப்பட்டார். இரு கட்சியினரும் கலைந்து சென்றனர்.
.........................
விஜயபிரபாகரன் மீது கடும் கோபத்தில் அ.தி.மு.க.,வினர்
இந்த பிரச்னைக்கு இன்னொரு காரணமாக விஜயபிரபாகரனையும் அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர். 2024ல் அ.தி.மு.க., கூட்டணியில் விருதுநகர் லோக்சபா வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது அ.தி.மு.க.,வினர் இவருக்காக கடுமையாக உழைத்தனர். 4379 ஓட்டு என்ற குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார். இந்நிலையில் இப்போது தி.மு.க., கூட்டணியில் இணைந்து விருதுநகரில் அ.தி.மு.க., வேட்பாளருக்கு எதிராக போட்டியிடுகிறார். நன்றி மறந்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என கட்சியினர் கோபத்தில் உள்ளதாலும், இந்த வாக்குவாதம், தள்ளுமுள்ளுவை ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர்.