குவியும் தேர்தல் விதிமீறல் :வழக்குகள் கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகள் அலட்சியம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் விதிமீறல் வழக்குகள் அரசியல் கட்சிகள் மீது போலீசார் பதிவு செய்வதை கட்சி நிர்வாகிகள் கண்டுகொள்ளாமல் தேர்தல் விதிமுறைகளை மீறுவது அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகளில் வரும் 23ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அ.தி.மு.க., - தி.மு.க., - த.வெ.க., - நா.த.க., என நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையம் மூலம் வேட்பாளர்கள் மற்றும் கட்சி பிரமுகர்களுக்கான விதிமுறைகள் வகுத்துள்ளனர். இந்த விதிமுறைகளை அரசியல் கட்சியினர் சரியாக கடைபிடிக்கின்றனரா என்பதை கண்காணிக்க தேர்தல் பிரிவு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த விதிகளை மீறும் அரசியல் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு போடும் பணியில் காவல் துறையினர் உள்ளனர்.
அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு, தேர்தல் பிரிவு அதிகாரிகள் விதிமுறைகள் பற்றி எவ்வளவு தான் அறிவுறுத்தினாலும் அவர்கள் அதை சிறிதும் கூட மதிப்பதில்லை. வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து, அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் செய்யும் எந்த பணிகளிலும் தேர்தல் விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. இதனால், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தது முதல் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ஊர்வலமாக நிர்வாகிகளோடு போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வந்தது முதல் தேர்தல் விதிமீறல் வழக்குகளை போலீசார் பதிந்து வருகின்றனர்.
இதில், எந்த கட்சிகளுக்கும் பாரபட்சமின்றி தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் விதிமீறல் வழக்குப் பதிந்து வருகின்றனர்.
அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் வழக்குகளும் அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, அ.தி.மு.க., - தி.மு.க., - வி.சி., - காங்., - நா.த.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது கடந்த மார்ச் 15ம் தேதி முதல் கடந்த ஏப்ரல் 4ம் தேதி வரை 28 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இதில், பட்டாசு வெடித்தல், ஊர்வலமாக வருதல், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனு தாக்கல் தேதி முடிவதற்கு முன்பாகவே விதிமீறல் வழக்குகள் 28 வந்துள்ள நிலையில், இன்னும், பிரசாரம், பொதுக்கூட்டங்கள், ஓட்டு கேட்பு போன்ற நிகழ்வுகளில் இன்னும் வழக்குகள் அதிகளவில் பதியக்கூடும் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
மேலும்
-
த.வெ.க., விஜய் சொல்வதெல்லாம் சாத்தியமற்றது: மார்க்சிஸ்ட்
-
மொத்தம் 7400 பேர் வேட்புமனு தாக்கல்; நாளை மறுநாள் வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்
-
ஈரான் உளவு பிரிவு தலைவர் தாக்குதலில் கொல்லப்பட்டார்
-
டிரம்பை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் போட முடிவு?
-
கெடுவை நீட்டித்தார் டிரம்ப் ; கிண்டலடிக்கிறது ஈரான்
-
வங்கதேசம்: தட்டம்மை நோய்க்கு 98 குழந்தைகள் பலி