மாநில பால் பேட்மின்டன் :எஸ்.ஆர்.எம்., அணி சாம்பியன்

சென்னை: மாநில பால் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஓசூரில், புல்ஸ் பால் பேட்மின்டன் அமைப்பு சார்பில், மாநில அளவிலான பால் பேட்மின்டன் போட்டி, ஏப்., 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடந்தது.

போட்டியில், மாநிலம் முழுதும் இருந்து 36 அணிகள் பங்கேற்றன. போட்டிகள், 'நாக் அவுட்' மற்றும் லீக் முறையில் நடந்தன.

போட்டி தொடரின் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எஸ்.ஆர்.எம்., அணி, சூப்பர் லீக் சுற்றிலும் தன் ஆதிக்கத்தை தொடர்ந்தது.

சூப்பர் லீக் சுற்றில் எஸ்.எஸ்., பாய்ஸ் அணியை 35 - -25, 35 - -23 என்ற கணக்கிலும், ஓசூர் புல்ஸ் அணியை, 35 - -11, 35 - -25 என்ற கணக்கிலும் தோற்கடித்தது.

எனினும், ஏ.ஆர்., மருத்துவமனை அணியிடம் 33 - 35, 30 - 35 என ஒரே தோல்வியை சந்தித்த எஸ்.ஆர்.எம்., அணி தளராது, அடுத்த ஆட்டத்தில் ஓ.பி.பி.சி., ஸ்ரீரங்கம் அணியை 35 - 31, 35 - 30 என்ற கணக்கில் வீழ்த்தி, மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியது.

முழு தொடரிலும் துல்லியமான ஆட்டத்தால், எஸ்.ஆர்.எம்., அணி முதலிடம் பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

ஓ.பி.பி.சி., ஸ்ரீரங்கம் அணி இரண்டாம் இடத்தையும், செங்கை ஜெ.ஜெ., பாய்ஸ் அணி மூன்றாம் இடத்தையும் திண்டுக்கல் ஏ.ஆர்., மருத்துவமனை அணி நான்காம் இடத்தையும் கைப்பற்றி அசத்தின.

Advertisement