சிலிக்கான் மண் எடுக்க தடை விதிக்க கோரி தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு
செய்யூர்:நயினார்குப்பம் கிராமத்தில் சிலிக்கான் மண் எடுக்க தடை விதிக்க வேண்டும் என, கிராம மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் நிலையில் நடவடிக்கை எடுக்காததால், சட்டசபை தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம், நயினார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் கழிவெளி ஓரத்தில் சிலிக்கான் தாது மண் படுகைகள் உள்ளன.
இந்த சிலிக்கான் மண் கண்ணாடி தயாரிப்பு, கட்டுமானப்பொருட்கள் தயாரிப்பு, தாவர வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரித்தல் போன்ற பல்வேறு துறைகளில் பயன் படுத்தப்படுகிறது. கனிம வள நிறுவனம் சார்பாக டெண்டர் விடப்பட்டு இப்பகுதியில் உள்ள சிலிக்கான் தாது மண் எடுக்கப்பட்டு வருகிறது.
அதிக அளவில் தாது மண் ஏற்றுமதி செய்வதால், நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும், கழிவெளிநீர் நிலத்தடி நீருடன் கலந்து உப்புநீராக மாறி வருவதால் பொது மக்கள், குடிநீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது புதிதாக நயினார்குப்பம் கிராமத்தில் சிலிக்கான் தாது மண் எடுக்க முதல்கட்ட பணி நடந்து வருகிறது.
நயினார்குப்பம் பகுதியில் தாதுமணல் எடுத்தால் நிலத்தடிநீர், விவசாயம், சுற்றுச்சூழல், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தாது மணல் எடுக்க தடை விதிக்க வேண்டும் என, கிராம மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்து நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன் நயினார்குப்பம் பகுதியில் தாதுமணல் எடுக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும், இல்லை எனில் சட்டசபை தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக நயினார்குப்பம் மக்கள் அறிவித்து செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்துள்ளனர்.