புது மாப்பிள்ளைக்கு யோகம் வருமா
லக்னோ: சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், 26, நிலை பரிதாபமாக உள்ளது. இடது கை வேகப்பந்துவீச்சாளரான இவர், கிரிக்கெட் லீக் தொடரில் மும்பை அணிக்காக 2021ல் ரூ. 20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். வெறும் 5 போட்டிகளில் (2021-25) தான் களமிறக்கப்பட்டார். 3 விக்கெட் வீழ்த்தினார். இம்முறை அடிப்படை தொகையான ரூ. 30 லட்சத்திற்கு லக்னோ அணிக்கு மாறினார். இங்கும் வாய்ப்புக்காக ஏங்குகிறார்.
ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் சக வீரர்களுக்கு தண்ணீர் எடுத்து வரும் பணியை செய்தார். நேற்று வலை பயிற்சியில் லக்னோ கேப்டன் ரிஷாப் பன்ட்டிற்கு எதிராக 'யார்க்கர்' மழை பொழிந்தார். இது அனைவரையும் கவர்ந்தது.
சமீபத்தில் தான் அர்ஜுன்-சானியா சந்தோக் திருமணம் நடந்தது. 'புது மாப்பிள்ளை' யோகம் இவருக்கு வாய்ப்பை தேடித் தரலாம். லக்னோ அணியில் ஷமி, மயங்க் யாதவ், மொசின் கான், அவேஷ் கான் போன்ற 'வேகப்புயல்கள்' இருப்பதால், அர்ஜுன் கடினமாக போராட வேண்டும். லக்னோ அணி அடுத்த போட்டியில் கோல்கட்டாவை (ஏப்.9, ஈடன் கார்டன்) சந்திக்க உள்ளது. இதில் லக்னோவுக்காக அறிமுகமாக காத்திருக்கிறார் அர்ஜுன்.
தோனி எப்போ வரப் போறாார்...
சென்னை: தோனி இல்லாமல் சென்னை அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்று தவிக்கிறது. கால் தசை பிடிப்பால் அவதிப்பட்டு வரும் இவர், தேறி வருகிறார். முதுகு வலியில் இருந்து பிரவிஸ் மீண்டுள்ளார். இருவரும் பயிற்சியில் ஈடுபட்டனர். ஏப். 11ல் சேப்பாக்கத்தில் நடக்க உள்ள டில்லிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கலாம். சென்னை அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''தோனி விஷயத்தில் அவசரப்பட மாட்டோம். காயத்தில் இருந்து முழுமையாக மீளும் வரை காத்திருப்போம். பிரவிஸ் அடுத்த போட்டியில் பங்கேற்பது உறுதி,''என்றார்.
தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் கிளாசன் கூறுகையில்,''தோனி இல்லாதது பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக, ஒரு போட்டியில் 5-10 பந்துகளை தான் சந்திக்கிறார். இவரது தலைமை தான் அணிக்கு பெரும் பலம்,''என்றார்.
முனாப் படேலை ஞாபகம் இருக்கா
புதுடில்லி: இந்திய அணியின் முன்னாள் 'வேகப்புயல்' முனாப் படேல், 42. கடந்த 2018ல் ஓய்வு பெற்றார். தற்போது டில்லி அணியின் பவுலிங் பயிற்சியாளராக உள்ளார். நம்ம நடராஜன், நிகிடி போன்றவர்களை பட்டை தீட்டுகிறார். ஸ்டார்க் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறார். முனாப் கூறுகையில்,''கடந்த இரு போட்டியில் ஸ்டார்க் இல்லாமல் டில்லி அணி வென்றது. இதனால் இவர் இல்லாத குறையை உணரவில்லை. தோள்பட்டை வலியால் அவதிப்படும் இவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் தடையில்லா சான்றிதழ் கிடைக்கவில்லை. கிரிக்கெட் லீக் தொடரின் சிறந்த பவுலர் ஸ்டார்க். இவரது அனுபவம் அணிக்கு கைகொடுக்கும். விரைவில் டில்லி அணிக்காக களமிறங்குவார்,''என்றார்.
எக்ஸ்டிராஸ்
* உலக தடகள 'ரிலே' போட்டி, வரும் மே 2-3ல் போஸ்ட்வானாவில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க இந்தியாவின் ஆண்கள் (4*400 மீ.,), பெண்கள் (4*100 மீ.,), கலப்பு (4*100, 4*400 மீ.,) என 4 அணிகள் தகுதி பெற்றன.
* தாய்லாந்தில் நடந்த ஆசிய/ஓசியானா 'பவர் லிப்டிங்' சாம்பியன்ஷிப், 45 கிலோ பிரிவில், இந்தியாவின் ஜஸ்பிரீத் கவுர் வெண்கலம் வென்றார்.
* தாய்லாந்தில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து (20 வயது) தொடர் நடக்கிறது. 'சி' பிரிவில் இடம் பெற்ற இந்தியா, முதல் இரு போட்டியில் ஜப்பான், ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இன்று தனது கடைசி போட்டியில் சீன தைபே அணியை எதிர்கொள்கிறது.
* அர்ஜென்டினா செல்லவுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. போட்டிகள் ஏப். 13, 14, 16, 17ல் பியுனஸ் ஏர்சில் நடக்க உள்ளன.
* எகிப்தில் 'எல் கவுனா ஓபன்' ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் உலகின் 'நம்பர்-25' வீரர், இந்தியாவின் அபே சிங், 'நம்பர்-7' வீரர், எகிப்தின் யூசெப் இப்ராஹிமை சந்தித்தார். 68 நிமிடம் நீடித்த போட்டியில் அபே சிங் 2-3 என (11-7, 9-11, 11-9, 5-11, 8-11) என வீழ்ந்தார்.
* ஜூனியர் காமன்வெல்த் பளுதுாக்குதலில், கடந்த ஆண்டு தங்கம் வென்றவர் இந்தியாவின் சாய்ராஜ் 18 (மகாராஷ்டிரா). தடை செய்யப்பட்ட மருந்து பயன்படுத்தி சிக்கியதால் தற்காலிகமாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். தனது பயிற்சியாளர் தான் திட்டமிட்டு தன்னை சிக்க வைத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.
* இந்திய மண்ணில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக தெரிவித்து, சமீபத்திய 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க மறுத்தது வங்கதேசம். பல்வேறு சர்ச்சைக்குப் பின், வங்கதேசம் நீக்கப்பட, ஸ்காட்லாந்து அணி பங்கேற்றது. இந்த குழப்பங்களுக்கு காரணமான அமினுல் இஸ்லாம், வங்கதேச கிரிக்கெட் போர்டு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னாள் துவக்க வீரர் தமிம் இக்பால் தலைமையில் 11 பேர் கொண்ட தற்காலிக குழு, அமைக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2720 அதிகரிப்பு
-
தமிழக அமைச்சர்களின் மனைவியரில் யாருக்கு சொத்து அதிகம்? டாப் 10 பட்டியல் இதோ!
-
தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள்… அனல் பறக்கும் பிரசாரம்; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் அமல்; கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் சரிவு
-
வேகத்தடை அமைக்க கோரிக்கை
-
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி 'மாஜி' அமைச்சர் ஆருடம்