ராஜஸ்தான் 'ஹாட்ரிக்' வெற்றி * மும்பை அணி ஏமாற்றம்
கவுகாத்தி: மும்பைக்கு எதிரான கிரிக்கெட் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் கிரிக்கெட் லீக் தொடரின் 19 வது சீசன் நடக்கிறது. சென்னை, மும்பை, நடப்பு சாம்பியன் பெங்களூரு உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று கவுகாத்தியில் நடந்த போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதின.
11 ஓவர் போட்டி
கவுகாத்தியில் பெய்த கனமழை காரணமாக, சுமார் மூன்று மணி நேரம் தாமதமாக போட்டி துவங்கியது. இரு அணிக்கும் தலா 11 ஓவர் என போட்டி குறைக்கப்பட்டது. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங் தேர்வு செய்தார்.
சூப்பர் துவக்கம்
ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், 15 வயது வைபவ் சூர்யவன்ஷி ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. இருவரும் ரன் மழை பொழிந்தனர். முதல் ஓவரை தீபக் சகார் வீசினார். முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கினார் ஜெய்ஸ்வால். தொடர்ந்து அடுத்தடுத்த பந்துகளில் சிக்சர், பவுண்டரி என விளாசினார். பின், கடைசி இரு பந்திலும் ஜெய்ஸ்வால் பவுண்டரி அடிக்க, முதல் ஓவரில் 22 ரன் எடுக்கப்பட்டன.
ஜெய்ஸ்வால் அபாரம்
இரண்டாவது ஓவரை வீசினார் பும்ரா. கிரிக்கெட் அரங்கில் பும்ரா வீசிய முதல் பந்தை எதிர்கொண்ட வைபவ், துணிச்சலாக சிக்சருக்கு அனுப்பி அசத்தினார். தொடர்ந்து 4வது பந்தையும் சிக்சருக்கு பறக்க விட்டார். ஷர்துல் தாகூர் வீசிய 5வது ஓவரில் 6, 4, 6 என விளாசிய வைபவ், 39 ரன்னில் (14 பந்து) அவரிடமே அவுட்டானார்.
துருவ் (2) ஏமாற்றினார். மறுபக்கம் 23 பந்தில் அரைசதம் அடித்தார் ஜெய்ஸ்வால். கேப்டன் ரியான் பராக், 10 பந்தில் 20 ரன் எடுத்தார். ராஜஸ்தான் அணி 11 ஓவரில் 150/3 ரன் குவித்தது. ஜெய்ஸ்வால் (77 ரன், 32 பந்து), ஹெட்மயர் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
சரிந்தது மும்பை
மும்பை அணிக்கு ரிக்கிள்டன் (8), ரோகித் சர்மா (5) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. சூர்யகுமார் 6 ரன் மட்டும் எடுக்க, திலக் வர்மா 14 ரன்னில் கிளம்பினார். ஹர்திக் பாண்ட்யாவும் (9) நிலைக்கவில்லை. ரூதர்போர்டு 8 பந்தில் 25, நமன் திர் 13 பந்தில் 25 ரன் எடுத்த போதும், வெற்றிக்கு போதவில்லை.
மும்பை அணி 11 ஓவரில் 123/9 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஏற்கனவே குஜராத், சென்னையை வென்ற ராஜஸ்தான் அணி, நேற்று மும்பையை வீழ்த்தி, 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.
19 அரைசதம்
கிரிக்கெட் லீக்கில் ராஜஸ்தான் அணிக்காக அதிக அரைசதம் அடித்தவர்களில் 3வது இடத்தை ரகானே (93 இன்னிங்ஸ்), வாட்சனுடன் (76) பகிர்ந்து கொண்டார் ஜெய்ஸ்வால் (69). மூவரும் தலா 19 அரைசதம் அடித்தனர். முதல் இரு இடத்தில் பட்லர் (82ல் 25), சாம்சன் (144ல் 25) உள்ளனர்.
58 ரன்
கிரிக்கெட் லீக் தொடரில் முதல் 3 ஓவரில் அதிக ரன் எடுத்த அணி வரிசையில் ராஜஸ்தான் (3 ஓவர், 58/0 ரன்) 3வது இடம் பெற்றது. முதல் இரு இடத்தில் பெங்களூரு (66/0, கொச்சி, 2011), ஐதராபாத் (62/0, டில்லி, 2024) உள்ளன.
100 சிக்சர்
ராஜஸ்தான் அணிக்காக நேற்று தனது 100வது சிக்சர் அடித்தார் ஜெய்ஸ்வால். 100க்கும் அதிகமான சிக்சர் அடித்தவர்களில் 4வது இடம் பெற்றார். முதல் 3 இடத்தில் சாம்சன் (192), பட்லர் (135), வாட்சன் (109) உள்ளனர்.
மேலும்
-
நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள்; எச்சரிக்கிறார் ரஜினி
-
தேர்தல் ஆணையம் மீது புகார் கூறாத ஸ்டாலின்: புகார்களை அடுக்கும் மம்தா: எதிர்க்கட்சிகளுக்குள் ஏன் இந்த வேறுபாடு?
-
மக்களை பற்றி கவலையில்லை; குடும்பத்தை பற்றி மட்டுமே கவலை: முதல்வர் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு
-
தொகுதி மறுவரையறை ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2720 அதிகரிப்பு