போக்குவரத்து நெரிசலுக்கு மேம்பாலம் விரிவுபடுத்தணும்

மேட்டுப்பாளையம்: காரமடை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என சந்தை வியாபாரிகள், தி.மு.க., வேட்பாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரம், நேற்று காலை காரமடை அரங்கநாதர் கோவிலில் சுவாமி கும்பிட்டு தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். நகரில் மேற்கு ரத வீதி, புல்லுக்கடை முக்கு, பெள்ளாதி சாலை, கன்னார்பாளையம் சாலை, காரமடை தினசரி சந்தை, அய்யப்பன் கோவில் பகுதி, தோலம்பாளையம் சாலை உள்பட நகரில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

காரமடை தினசரி சந்தையில், காய்கறிகளை எடை போட்டு சிலருக்கு விற்பனை செய்தார். பின்பு அங்குள்ள வியாபாரிகளிடம் உங்களின் குறைகள் என்ன என, வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரம் கேட்டார். அதற்கு, காரமடை நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளும் அவதிப்படுகின்றனர். சந்தைக்கு மக்களின் வருகையும் குறைந்து வருகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்கு, மேட்டுப்பாளையம் சாலையில், காரமடை ஊராட்சி ஒன்றியம் வரை மேம்பாலத்தை விரிவு படுத்தி, புதிதாக கட்ட வேண்டும்,' என்றனர்.

Advertisement