வி.சி.கட்சி வேட்பாளர் வன்னிஅரசு கவுன்சிலரிடம் ஆதரவு திரட்டினார்

திண்டிவனம்: திண்டிவனம்(தனி) சட்டமன்ற தொகுதியில், தி.மு.க.,தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி சார்பில், வி.சி.கட்சி வேட்பாளராக கட்சியின் துணை பொது செயலாளர் வன்னி அரசு போட்டியிடுகிறார். வேட்பாளரை ஆதரித்து கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்தார்.

இதற்கிடையில் தி.மு.க.,செயல்வீரர்கள் கூட்டத்தில், மண்டல பொறுப்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வம், ''திண்டிவனம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 கவுன்சிலர்களில் 26 பேர் தி.மு.க.,கவுன்சிலர்களாக இருப்பதால், நகரப்பகுதியில் தி.மு.க.,கூட்டணி கட்சி வேட்பாளர் கூடுதலாக ஓட்டுக்களை பெற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தி.மு.க.,கூட்டணி வேட்பாளருக்கு கூடுதல் ஓட்டுக்கள் பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று காலை திண்டிவனம் நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன் தலைமையில், நகர தி.மு.க.,செயலாளர் கண்ணன், நகர அவைத்தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் வி.சி.,கட்சி நிர்வாகிகளுடன் அனைத்து தி.மு.க.,கவுன்சிலர்களின் வீடுகளுக்கு, வேட்பாளர் வன்னி அரசுடன் நேரில் சென்று, வி.சி.,கட்சி வேட்பாளருக்கு பானை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

Advertisement