பிரச்சார யுக்தி மாறினாலும் கிராமங்களில் 'கெத்து' காட்டும் சுவர் விளம்பரம்
பெ.நா.பாளையம்: சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் பிரச்சார யுக்தி மாறி இருந்தாலும், தற்போதும் கிராமங்களில் சுவர் பிரச்சாரம் அரசியல் கட்சியினரிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்., 23ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. நிலையான கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படை உள்ளிட்டோர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றனர்.
மேலும், எவ்வித முன் அனுமதி பெறாமல், வீடுகளுக்கு எதிரில் பிளக்ஸ் பேனர் வைத்தல், சுவரில் வாசகங்கள் எழுதுதல், கட்சி கொடி கம்பம் அமைத்தல், அரசு சுவர்களில் கட்சி வாசகங்கள் எழுதுதல் உள்ளிட்டவை குறித்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
இந்நிலையிலும், அரசியல் கட்சியினர் சுவர்களில், குறிப்பாக, கிராமங்களில் சுவர் பிரச்சாரம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து, அரசியல் கட்சியினர் கூறுகையில்,'கிராமங்களில் தாங்கள் குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிவிக்கும் வகையில், தங்களுடைய வீட்டின் சுவர்களில் குறிப்பிட்ட கட்சியின் சின்னத்தையோ, வேட்பாளரின் பெயரையோ எழுதும்படி குறிப்பிட்ட கட்சியின் உறுப்பினர்களே கூறுகின்றனர். அவர்களிடம் முறைப்படி எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்ற பின்னர் சுவர் பிரச்சாரம் செய்யப்படுகிறது' என்றனர்.
இது குறித்து சுவரில் சின்னம் வரையும் பணியில் ஈடுபட்டு வரும் நபர்கள் கூறுகையில்,' தற்போது பிரச்சார யுத்தி வெவ்வேறு தளங்களுக்கு சென்று விட்டது. இருந்தாலும், கிராமப்புறங்களில் தேர்தல் நேரங்களில் எங்களை அழைத்து சுவர் பிரச்சாரம் எழுத வைக்கின்றனர். பெயிண்ட், பிரஷ் வாங்கி கொடுத்து, சின்னம் மற்றும் வேட்பாளரின் பெயரை எழுத, அளவை பொறுத்து, 80 முதல், 200 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்கிறோம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நேரத்தில் பகல், இரவு என, 24 மணி நேரமும் பணிச்சுமை இருக்கும். தற்போது கிராமங்களில் மட்டும் அவ்வப்போது சிறிய அளவிலான வேலை கிடைக்கிறது. நகர்ப்புறங்களில் சுவர் பிரச்சாரம் செய்வது அறவே நின்றுவிட்டது' என்றனர்.
சுவர் பிரச்சாரம் கூடுதல் படம்
சுவர் பிரச்சாரம் கூடுதல் படம்.