மீனாட்சி அம்மன் கோயில் தேர்களுக்கு 7 டன் எடையில் புதிய இரும்பு சக்கரங்கள்: வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி தீவிரம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அம்மன், சுவாமி தேர்களுக்கு மொத்தம் 7 டன் எடையில் 4 புதிய இரும்பு சக்கரங்கள் பொருத்தும் பணி திருச்சி 'பெல்' நிறுவனம் சார்பில் நடந்து வருகிறது. சிதலமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி முடியும் தருவாயில் உள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழா ஏப்.,19ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்வாக ஏப்.,26 அம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்.,28ல் காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப்.,29ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அம்மனுக்கு 12 டன் எடை கொண்ட தேரும், சுவாமிக்கு 16 டன் எடை கொண்ட தேரும் உள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன்பு மரத்தாலான சக்கரங்கள் இருந்தன. பின்னர் திருச்சி 'பெல்' நிறுவனம் மூலம் ஹைட்ராலிக் பிரேக் வசதியுடன் இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டன.

இதன் அச்சுகள் தேய்ந்து போனது கடந்தாண்டு தேரோட்டத்தின்போது தெரியவந்தது. இதனால் புதிய இரும்பு சக்கரங்கள் பொருத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக திருச்சி 'பெல்' நிறுவனத்தை அணுகியபோது, அதிக ஆர்டர்கள் இருந்ததால் முதலில் ஏற்கவில்லை. பிறகு ஒப்புக்கொண்டது. 4 இரும்பு சக்கரங்கள் தலா 1732.14 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் முதல் தேர்களில் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோயில் நிதியில் இருந்து அம்மன் தேருக்கு ரூ.15 லட்சமும், சுவாமி தேருக்கு ரூ.20 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.

வீரவசந்தராயர் மண்டபம் மீனாட்சி கோயில் கிழக்கு கோபுரத்தையொட்டி அமைந்துள்ள வீரவசந்தராயர் மண்டபம் 2018 பிப்.,2ல் தீ விபத்தில் சிதலமடைந்தது. இதன் காரணமாக கும்பாபிஷேகமும் தள்ளிப்போனது. இந்தாண்டு செப்.,17ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ள நிலையில், மண்டபம் சீரமைப்பு பணி வேகமாக நடந்து வருகிறது. மொத்தம் 79 துாண்களில் இதுவரை 66 துாண்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 13 துாண்களை பொருத்திவிட்டால் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி முழுமை பெற்றுவிடும். இப்பணிகள் கோயில் இணைகமிஷனர் சுரேஷ் மேற்பார்வையில் நடந்து வருகிறது.

Advertisement