திமுக.,வை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு போடுங்க : தமிழக பா.ஜ., அறிக்கை

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக., தலைமையிலான கூட்டணி ஒரு பக்கம், அதிமுக., தலைமையிலான கூட்டணி ஒருபக்கம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழக பா.ஜ.க., செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் வெளியிட்ட அறிக்கை....

வரும் 23ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக, காங்கிரஸ் கூட்டணி, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. இதனால் நான்கு முனைப் போட்டி என ஊடகங்கள் எழுதினாலும் உண்மையான போட்டி, அதிமுக - பாஜக கூட்டணிக்கும், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையில்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பு திமுக கூட்டணியை பலமான கூட்டணி என்பது போன்ற தோற்றத்தை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தி வந்தார். அது வெறும் மாயை என்பது அவர்களின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையின் போதே அம்பலப்பட்டு போனது. வெளியே பலமிக்கவர்கள் என்பதுபோல காட்டிக் கொண்டாலும், உள்ளே தோல்வி பயத்தில் திமுக தலைமை உள்ளது. அதனால்தான் 2021ல் 0.5 சதவீதம் வாக்குகளைப் பெற்ற தேமுதிகவையும், வாக்குகளே இல்லாத தனிநபர் கட்சிகள், மதவெறி கொண்ட நபர்களை எல்லாம் கூட்டணியில் சேர்த்துள்ளது. திமுக தேறாது என நினைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விஜய்யுடன் கூட்டணி சேர முடிவு செய்திருந்தார். காங்கிரதுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவியை கொடுத்து கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளன.

கடந்த ஒருவாரமாக தமிழக தேர்தல் களத்தைப் பார்க்கும் போது திமுக தோற்கடிப்படுவது உறுதி என்பது தெரிகிறது. பல்வேறு கருத்துக் கணிப்புகளும் அதிமுக - பாஜக கூட்டணி வெல்லும் என கூறுகின்றன. தமிழகத்தில் பெருவாரியான மக்கள் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

திமுகவின் குடும்ப, ஊழல் ஆட்சியை மக்கள் துளியும் விரும்பவில்லை. சென்னையில் யாராவது வீடு கட்டினால் திமுக கவுன்சிலர்களுக்கு ஒரு சமையலறைக்கு 50 ஆயிரம் லஞ்சம் கேட்கிறார்கள். லஞ்சம் கொடுக்காமல் அரசு அலுவலகங்களில் எந்த வேலையும் நடப்பதில்லை. சமூக நீதி பேசும் திமுக ஆட்சியில் பல்லாயிரம் கொடுக்காமல் ஜாதிச் சான்றிதழ் கிடைப்பதில்லை.

இதுவரை திரைமறைவில் ஒரு இயக்குனரைப் போல திமுகவை இயக்கி வந்த, திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், இப்போது கதநாயகனைப் போல வெளிப்படையாக அரசியல் களத்திற்கு வந்துள்ளார். திமுக பிரசார கூட்டங்களில் பங்கேற்கிறார். திமுக வேட்பாளர்கள், நிர்வாகிகளுக்கு வெளிப்படையாகவே கட்டளையிடுகிறார். எனவே, மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், இப்போதிருக்கும் திமுக ராஜ்யசபா எம்பியை ராஜினாமா செய்ய வைத்து, சபரீசனை எம்.பியாக்கி விடுவார்கள். அப்பா முதல்வர், தங்கை லோக்சபா எம்.பி, மகன் துணை முதல்வர், மருமகன் ராஜ்யசபா எம்.பி என ஒரு குடும்பத்தின் ஆதிக்கமமே நிலைபெறும்.

ஸ்டாலின் தனது முதல் முறை ஆட்சியில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறையை கொண்டு அடக்குறையில் ஈடுபட்டு திருப்பரங்குன்றம் கந்தன் மலையில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. மீண்டும் ஸ்டாலின் முதல்வரானால் திருப்பரங்குன்றம் கந்தன் மலையை சிக்கந்தர் மலை என அறிவித்து விடுவார்கள். கார்த்திகை தீபம் ஏற்றும் பழக்கமே தமிழர்களுக்கு இல்லை என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விடுவார்கள். தமிழர்கள் சமயத்தை, கலாசாரத்தை, திருவிழாக்களை காப்பாற்ற திமுக தோற்கடிக்கப்பட வேண்டும்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கொடுங்கோல் மொகலாய மன்னராட்சியை பார்க்க வேண்டியிருக்கும். எனவே, திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என நினைப்பவர்கள் அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும். மாறாக தவெக, நாம் தமிழர் கட்சிகளுக்கு வாக்களித்தால், அதனால் நன்மையும் இல்லை. நமது வாக்கிற்கு மதிப்பும் இல்லாமல் போய்விடும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்போம். திமுக கூட்டணியை தோற்கடிக்க தமிழகத்தை குடும்ப, ஊழல், சர்வாதிகார ஆட்சியிலிருந்து மீட்டெடுப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement