தேர்தல் பணியில் 2,198 மாணவர்கள் பொதுமக்கள் பாராட்டு  

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தல் அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய மொத்தம் 4,836 அரசுப் பணியாளர்கள் தேர்தல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டனர்.

இதில் ஓட்டுப்பதிவு அதிகாரிகள், உதவியாளர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகள் என தலா 1,099 பேர் தங்களது பணிகளைச் செவ்வனே மேற்கொண்டனர். பாதுகாப்புப் பணியில் 2,971 போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், இந்தத் தேர்தலில் ஒரு சிறப்பம்சமாக மாணவர்களின் பங்களிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஒரு ஓட்டுசாவடிக்கு இரண்டு பேர் என்ற வீதத்தில் மொத்தம் 2,198 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தேர்தல் பணியில் களம் இறக்கப்பட்டனர். ஓட்டுச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர். நடக்க இயலாத முதியோர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் சக்கர நாற்காலிகளில் அமர வைத்து, அவர்கள் ஜனநாயகக் கடமையாற்ற உறுதுணையாக இருந்தனர். ஓட்டுச்சாவடிக்குள் தடை செய்யப்பட்ட மொபைல் போன்களை வாங்கி பாதுகாப்பாக வைத்து, பின்னர் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

பணியில் இருந்த மாணவர்கள் தவிர, ஏதேனும் அவசரத் தேவை ஏற்பட்டால் களம் இறங்குவதற்காக மேலும் 2,198 மாணவர்கள் ரிசர்வ் நிலையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அரசுப் பணியாளர்களுடன் இணைந்து தோள் கொடுத்த இந்த மாணவர்களின் சேவை, ஓட்டளிக்க வந்த பொதுமக்களிடையே மிகுந்த பாராட்டை பெற்றது.

Advertisement