பெங்களூரில் சட்டவிரோதமாக வசித்த 4 வங்க தேசத்தவருக்கு 3 ஆண்டு சிறை என்.ஐ.ஏ., நீதிமன்றம் தீர்ப்பு

பெங்களூரு: இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவி, பெங்களூரில் வசித்த, வங்கதேசத்தை சேர்ந்த நால்வருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, என்.ஐ.ஏ., நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வங்கதேசத்தை சேர்ந்த நபர்கள், இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் கர்நாடகாவின் பெங்களூரில் சட்டவிரோதமாக வசிக்கின்றனர் என, மத்திய உளவுத்துறை தகவல் தெரிவித்தது.

இதன் அடிப்படையில், 2023ல் என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு நிறுவனம், வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியது.

பெங்களூரில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். சிலரை கண்டுபிடித்து கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து வங்கதேசத்து அடையாள அட்டைகள், டிஜிட்டல் சாதனங்கள், போலியான ஆவணங்கள் தாக்கல் செய்து பெறப்பட்ட இந்திய ஆவணங்கள், இந்திய ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் வங்கதேசத்தில் இருந்து, பென்போல், ஜஷோர், அகவுரா வழியாக இந்தியாவுக்குள் நுழைந்ததை ஒப்புக்கொண்டனர். பொய்யான ஆவணங்களை உருவாக்கினர். பெங்களூரில் சில பகுதிகளில், குப்பையை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன், வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஆட்களை அழைத்து வந்து பணியிலும் சேர்த்தனர். இவர்களுக்கு காலியிடங்களை ஒப்பந்தத்துக்கு பெற்று, ஷெட்கள் அமைத்து சிலர் தங்க வைத்ததும். என்.ஐ.ஏ., விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையை முடித்து, 2024ன் பிப்ரவரியில் ஜகீர் கான், பாதல் ஹவுலாதர், கபீர் தாலுக்தார், முகமது பச்சு கராமி ஆகியோர் மீது, பெங்களூரின் என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

நீண்ட விசாரணையில் இவர்களின் குற்றம் உறுதியானது. எனவே நால்வருக்கும் மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ஒ ரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

அபராதம் செலுத்த தவறினால், கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்கும்படி உத்தரவிட்டது.

Advertisement